அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில், லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே திறப்பு விழாவுக்குத் தயாராகிவரும் சூழலில், ராம ஜென்மபூமி போல சிந்து நிலப்பரப்பையும் (பாகிஸ்தான் மாகாணம்) மீட்டெடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். முன்னதாக, லக்னோவில் இந்திய சிந்து சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள்கள் தேசிய சிந்து மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ஆற்றிய உரையை, மாநில அரசு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் யோகி ஆதித்யநாத், “500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிட்டது. 500 வருடங்கள் கழித்து நம்மால் ராம ஜென்மபூமியைத் திரும்பப் பெறமுடியும் என்றால், சிந்து நிலப்பரப்பையும் நம்மால் மீட்டெடுக்க முடியும்.
இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். இந்த நாடு பிளவுபட்டபோது லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் இந்தியாவின் மிகப் பெரும் நிலப்பகுதி பாகிஸ்தானிடம் சென்றது. பிரிவினைக்குப் பிறகு சிந்து சமூகம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. காரணம், அவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இன்று கூட, தீவிரவாதத்தின் பெயரில் பிரிவினையின் சோகத்தை நாம் சுமக்க வேண்டியிருக்கிறது. ஒருவரின் பிடிவாதமே நாட்டின் பிரிவினைக்குக் காரணம்.

சிந்து சமூகம் என்பது இந்தியாவின் சனாதன தர்மத்தில் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. கடும் நெருக்கடி சூழ்நிலையிலும் கூட சிந்து சமூகம் முன்னேறியிருக்கிறது. பூஜ்ஜியத்திலிருந்து உச்சிக்குச் செல்வது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிந்து சமூகத்தினரே” என்று கூறியதாக அரசு குறிப்பிட்டிருக்கிறது. மேலும், யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியதும், அங்கிருந்தவர்கள் ஆரவாரத்துடன் கரகோஷத்தை எழுப்பியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.