மதுரை: காமராசர் பல்கலைக்கழக டீன் கண்ணதாசனுக்கு எதிராக மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துணைவேந்தர் மற்றும் நிர்வாக பொறுப்பிலுள்ள பதிவாளர், தேர்வாணையர், டீன் உள்ளிட்டோரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில், இப்பல்கலைக்கழக டீன் கண்ணதாசனுக்கு எதிராக மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரை ஆட்சியர் அலுவலக பகுதி, காமராசர் பல்கலை கல்லூரி, ரேஸ்கோஸ் உட்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘தமிழக அரசே, உயர்கல்வித் துறையே நடவடிக்கை எடு’ மதுரை காமராசர் பல்கலை கல்லூரிகளில் பேராசிரியர்கள், முதல்வர்கள் பணி நியமனத்தில் துணைவேந்தர் , பதிவாளர் பணம் வசூலித்து தகுதியில்லாதவர்களை நியமனம் செய்த கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி, அரசியல் அதிகார தோரணையில் செயல்படும் முன்னாள் எம்எல்ஏ -வின் மகன் பேராசிரியர் கண்ணதாசனை (டீன்) அப்பதவியில் இருந்து உடனே விடுவித்து, நிரந்தர பணி நீக்கமும் செய்யவேண்டும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது, காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.