`அரபுகளின் நாடு அரபுகளுக்கே' என்று சொன்ன லாரன்ஸ் ஆஃப் அரேபியா யார்? | முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்

முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் டி.இ.லாரன்ஸ் (தாமஸ் எட்வர்டு லாரன்ஸ்). 1888 ஆகஸ்ட் 16-ம் தேதி பிறந்த இவர் `லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்று பின்னர் பரவலாக அறியப்பட்டார். துருக்கி (ஓட்டோமான்) சாம்ராஜ்யத்திற்கு எதிராக அரேபியர்கள் ஜூன், 1916ல் புரட்சி செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இதுவும் முதலாம் உலகப் போரின் முடிவைத் தீர்மானிக்க முக்கிய காரணியாக விளங்கியது.

துருக்கியர்களுக்கு எதிரான அரேபியர்களின் உள்நாட்டுப் போரை பிரிட்டன் ​தூண்டிவிட்டது. இதன் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தை வீழ்த்த முடியாமல் இருக்கும் தனக்குச் சாதகமாக ஏதேனும் நடக்கும் என்று எண்ணியது பிரிட்டன்.

தாமஸ் எட்வர்டு லாரன்ஸ் | T. E. Lawrence

ராணுவ சாகசங்கள், தூதரக தந்திரங்கள் இரண்டிலும் கைதேர்ந்தவராக விளங்கிய லாரன்ஸ், அரபு மக்களுக்கும் உண்மையாகவே நடந்து கொண்டதால் அவர்களின் விசுவாசத்தைப் பெற்றார். எகிப்திலுள்ள கெய்ரோவில் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் லாரன்ஸ். பிரிட்டிஷ் ராணுவத்தில் தளபதியாக இருந்த இவர் திறமையற்றவர் என்ற நினைப்பு அவரது மேலதிகாரிக்கு.

துருக்கியர்களுக்கு எதிராக அரபு இளவரசர் ஃபைசல் புரட்சி செய்யப்போவதாகச் செய்தி வர, இது குறித்த விவரங்கள் சேகரிக்க லாரன்ஸ் அனுப்பப்பட்டார். பிறப்பால் ஆங்கிலேயர்தான் என்றாலும் அரபு மொழியும் கலாசாரமும் அறிந்தவர் லாரன்ஸ். நீண்ட பாலைவனப் பயணத்துக்குப் பிறகு இளவரசர் ஃபைசல் மற்றும் அரபுத் தலைவர் ஷெரீப் உசேன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். லாரன்ஸின் அறிவாற்றலும் வெளிப்படையான பேச்சும் இளவரசருக்குப் பிடித்துப் போனது.

துருக்கியர்களுக்கு எதிராக​ப் புரட்சியில் ஈடுபடும் அரேபியர்களுக்கு ஆதரவான திட்டங்களை வகுத்துத் தந்த லாரன்ஸ், தனது வாதத் திறமையால் இரண்டு போட்டி அரபுக் குழுக்களை இணைத்தார். அதே சமயம் பிரிட்டிஷ் அரசு, அரபுகளிடையே லாரன்ஸுக்கு உண்டாகியிருக்கும் செல்வாக்கை உணர்ந்து தங்களுக்கு ஆதரவாக அரபுகள் இருக்க வேண்டும் என்று லாரன்ஸ் மூலம் வற்புறுத்தியது.

தாமஸ் எட்வர்டு லாரன்ஸ் | T. E. Lawrence

துருக்கியர்களுக்கு எதிரான ஒரு சதி திட்டம் தீட்டி அரபுகளுக்கு உதவினார் லாரன்ஸ். கொரில்லா தாக்குதல் நடத்தினால் பலன் அதிகமாக இருக்கும் என்றார். கொரில்லா போர்த் தந்திரங்களில் துருக்கியர்கள் கைதேர்ந்தவர்கள் அல்ல. இதனால் அகாபா என்ற துறைமுகம் ஜூலை, 1917ல் அரபுகள் கைவசமானது. இதன் காரணமாக ஓட்டோமான் ராணுவம் தனிமைப்படுத்தப்பட்டது. காரணம் அவர்களுக்கான ராணுவம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான வரத்து அந்தத் துறைமுகம் மூலமாகத்தான் நடைபெற்று வந்தது. அரபு அரசுகளுக்கு உதவ வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசைச் சம்மதிக்க வைத்ததிலும் லாரன்ஸுக்கு முக்கிய பங்கு உண்டு.

அது சரி, ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு எதிராக அரபுகள் ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்?

அரபுகளுக்கு முன்பாகவே அந்தச் சமயத்தில் வசித்து வந்த கிரேக்கர்கள், பல்கேரியர்கள், செர்பியர்கள் போன்றவர்கள் தங்களுக்குச் சுயாட்சி அல்லது சுதந்திரம் வேண்டுமென்று கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். எகிப்து, அல்ஜீரியா போன்ற அரபு நாடுகளை ஓட்டோமான் சாம்ராஜ்யம் இழந்துவிட்டது. இதன் காரணமாகவும் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திலிருந்த பிற அரேபியர்களுக்குச் சுதந்திர தாகம் அதிகமானது.

தாமஸ் எட்வர்டு லாரன்ஸ் | T. E. Lawrence

முக்கியமாக அந்த சாம்ராஜ்யம் முழுவதும் துருக்கி மொழிதான் அதிகாரபூர்வமான மொழி என்று கூறியது எதிர்ப்பை அதிகப்படுத்தியது. தாங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அரபி மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று அரபுகள் கொடி பிடிக்கத் தொடங்கினார்கள்.

தவிர துருக்கி அரசு ஆட்சியில் மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டு வந்தது. நிலங்கள் இனி விவசாயிகளுக்குச் சொந்தமல்ல என்றும் அவை எல்லாமே அரசுக்குச் சொந்தமானது என்றும் கூறியது எதிர்ப்பை வலுப்படுத்தியது. ‘ஷுக்ரா’ என்ற நடைமுறையை அது அமல்படுத்தியது. இதனால் அரபு இளைஞர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு ஓட்டோமான் ராணுவத்தில் கட்டாயமாகப் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தவிர ஓட்டோமான் ராணுவ வீரர்களுக்கு அளவற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டதால் அவர்கள் பொதுமக்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் நசிய, வளர்ச்சி திட்டங்கள் நின்றுவிட்டன.

இப்படிப்பட்ட அரசுக்கெதிரான கசப்பான ​சூழலில், `அரபுகளின் நாடு அரபுகளுக்கே’ என்று கூறிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் இதன் காரணமாக பிரிட்டிஷ் ராணுவத்தையே எதிர்க்கவும் துணிந்தார். பின்னர் அவரது செயல்பாடுகளை அங்கீகரித்த பிரிட்டிஷ் அரசு அவருக்கு அளித்த வீரப் பதக்கங்களைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்தார்.

‘செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம்’ (Seven Pillars of Wisdom)

முதலாம் உலகப்போர் முடிவடைந்தபின், பிரிட்டன் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கவும் லாரன்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இது மத்திய கிழக்குப் பகுதி இயக்கத்தைப் புதிய திசையில் செலுத்தியது எனலாம்.

இவற்றின் காரணமாக அவர் மிகவும் புகழ் மிக்கவராக விளங்கினார். இறந்த பிறகு அவர் புகழ் மேலும் பரவியது. அவர் எழுதிய ‘செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம்’ (Seven Pillars of Wisdom) என்ற நூலில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை​யெல்லாம் விரிவாக அவர் எழுதி வைத்திருந்தார். இதை ஒரு சரித்திர பொக்கிஷம் எனலாம்.

முதலாம் உலகப்போர் முடிந்த பிறகு லாரன்ஸைப் பொது வாழ்க்கைக்கு அழைத்துவந்தார் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில். சர்ச்சில் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அவர்கள் இருவரும் சேர்ந்து பிரிட்டன் அரபு மக்களுக்குச் செய்த அநீதிகளைச் சரி செய்ய முடியும் என்றும் அரபுப் பகுதிகளிலிருந்து பிரிட்டிஷ் ராணுவத்தை நீக்க வைக்க முடியும் என்றும் லாரன்ஸ் நம்பினார்.

1935ல் லாரன்ஸ் இறக்கும்வரை இந்த நோக்கங்களுக்காகப் போராடினார்.

லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்தின் போஸ்டர் | Lawrence of Arabia Movie Poster

(பின்னர் 1962ல் வெளியான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்ற திரைப்படம் லாரன்ஸின் புகழைப் பெரிதும் பரவச் செய்தது. இது ஏழு ஆஸ்கர் விருதுகள் வென்ற படம். பீட்டர் ஓ டூல், அலெக் கின்னஸ், ஆண்டனி குவின், ஒமர் ஷெரிப் என்று பல ஜாம்பவான்களின் அற்புத நடிப்பில் சிறப்பாகப் பேசப்பட்ட படம். 222 நிமிடங்களுக்கு ஓடிய படம். பொறுமையாக மட்டுமல்ல, விரும்பியும் பார்த்தனர் ரசிகர்கள். கிளாஸ், மாஸ் இரு தரப்பினருக்குமே பிடித்த படைப்பு. இந்தப் படத்தை இயக்கியவர் டேவிட் லீன். சரித்திரத் திரைப்படங்களை இயக்குவதில் பெரும்புகழ் பெற்றவர்).

– போர் மூளும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.