வைட்டமின் சி: கை, கால்வலி போக்குவது முதல் காயங்களை ஆற்றுவது வரை…

நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதிலும் சரும அழகைப் பராமரிப்பதிலும் வைட்டமின் சியின் பங்கு மகத்தானது எனக் கேள்விப்பட்டிருப்போம். வைட்டமின் சி வேறு எதற்கெல்லாம் உதவுகிறது, எந்தெந்த உணவுகளில் வைட்டமின் சி சத்து அதிகம் என மேலும் பல தகவல்களைப் பகிர்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

“நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஐசிஎம்ஆரின் பரிந்துரையின்படி, ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 65 மில்லிகிராமும், 55 மில்லிகிராமும் வைட்டமின் சி அவசியம் என்று வலியுறுத்துகிறது. அந்த அளவு நாம் எடுத்துக்கொள்கிறோமா என்பது சந்தேகமே. கொரோனா காலத்தில் வைட்டமின் சி குறித்து நிறைய பேசினோம். வைட்டமின் சி சப்ளிமென்ட்டுகளை வாங்கிப் பயன் படுத்தினோம். நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவுவதுடன் மேலும் பல பலன்களைத் தரக்கூடியது அந்த வைட்டமின்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி ஏன் அவ்வளவு முக்கியம்?

மனித உடலில் செல்கள் மிக முக்கியமானவை. செல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் வைட்டமின் சி பற்றி பெரிதாகப் பேசப்பட்டது. வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள், சப்ளிமென்ட்டுகள் எனத் தேடித்தேடி பலரும் எடுத்துக்கொண்ட கதைகளைப் பார்த்திருப்போம். எந்தச் சத்தையும் இயற்கையான முறையில் பெறுவதுதான் சரியானது. சப்ளிமென்ட்டாக எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

சரும அழகிலும் ஆரோக்கியத்திலும் வைட்டமின் சியின் பங்கு அவசியமானது. சரும செல்கள் தினமும் உதிர்ந்து, புதிதாக உருவாகும். அந்தச் செயலைச் சரியாகச் செய்யவும் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் வைட்டமின் சி சத்து அவசியமாகிறது.

 எலும்புகளின் இடையே `கார்ட்டிலேஜ்’ எனப்படும் ஜவ்வுப்பகுதியானது குஷன்போல பாதுகாப்பாக இருக்கும்.  வயதாக ஆக இந்த ஜவ்வு தேய்ந்து, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி, மூட்டுவலி, கை, கால்களில் வலி ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின்-சி மிக மிக அவசியம்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்…

கீழே விழுந்து அடிபட்டதால் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட காயம் என எல்லா வகையான காயங்களையும் ஆற்றுவதில் வைட்டமின் சி முக்கியமானது.

 இந்திய மக்கள் தொகையில் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம். குழந்தைகள் மற்றும் கருவுறும் வயதில் இருப்போர் இந்தப் பிரச்னைக்கு எளிதில் ஆளாகிறார்கள். டீன் ஏஜில் இருக்கும் பெண்களும் பீரியட்ஸில் ஏற்படும் ரத்த இழப்பு காரணமாக அனீமியா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும்கூட ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 54 சதவிகித ஆண்களும் பெண்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரத்தச்சோகையைக் குணப்படுத்த எடுத்துக்கொள்ளும்  மாத்திரை, உடலில் கிரகிக்கப்பட, கூடவே வைட்டமின் சியும் சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதனால்தான் மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கும்போது கூடவே வைட்டமின் சி சப்ளிமென்ட்டுகளையும் சேர்த்தே கொடுப்பார்கள்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

எந்தெந்த உணவுகளில் வைட்டமின் சி?

அகத்திக்கீரை, முளைக்கீரை, முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை மற்றும் பார்ஸ்லி கீரை மற்றும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில் வைட்டமின் சி இருக்கிறது. முக்கியமாக 100 கிராம்  நாட்டு நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? எனவே எந்த உணவைச் சமைத்தாலும் அதில்  சிறிது நெல்லிக்காயைத் தூவிச் சாப்பிடலாம்.  பச்சடியாகச் செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகள் போன்றவற்றை வேகவைத்த நீரை வீணாக்கக் கூடாது. அந்தத் தண்ணீரை சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றில் சேர்க்கலாம். நாட்டு கொய்யாவில் அதிக அளவிலான வைட்டமின் சி இருக்கிறது. 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தைவிட 100 மில்லி ஆரஞ்சுச் சாற்றில் அதிக வைட்டமின் சி இருக்கிறது. எனவே இயற்கையான முறையில் உடலில் வைட்டமின் சி சத்து சேர, மேற்குறிப்பிட்ட உணவுகளைத் தினமும் ஒன்றாகச் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.