ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே, நீண்ட கால மோதல் உள்ளது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தினர். இவற்றை பயன்படுத்தி, நிலம், கடல் மற்றும் வான் வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தென்பகுதிக்குள் நுழைந்தனர்.
மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்லையை ஊடுருவி வந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் அரசை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான போரை இஸ்ரேல் அரசு அறிவித்தது. பயங்கரவாதிகளை குறிவைத்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை துவக்கியது. இந்த மோதல்களில், இஸ்ரேலில் 1200க்கும் மேற்பட்டோரும், காசா பகுதியில் 900க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் போனில் பேசியுள்ளார்.
2.6 லட்சம் பேர் வெளியேற்றம்
காசா மீது இஸ்ரேல் விமானங்கள் 18 மணிநேரத்திற்கு மேலாக குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில் இதுவரை 2.6 லட்சம் பேர் காசா பகுதியில் இருந்து வெளியேறியதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement