IND vs AFG: இந்திய வீரர் முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை.. மறக்க முடியாத ஆட்டம்!

Mohammed Shami Hat Trick: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். டெல்லியின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருப்பதால் இந்தப் போட்டியில் பெரிய ஸ்கோரைக் காணலாம். எனினும் முதலில் பந்துவீச விரும்புவதாக இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இதில் இந்தியா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஒரு ஆட்டம் டை ஆனது. இந்திய அணியின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தனது பயணத்தைத் தொடங்கியது. வங்கதேசத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்திய அணியின் கிரிக்கெட் பயணம்

பேட்டிங்கைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் இதுவரை டீம் இந்தியாவுக்காக ஷுப்மான் கில் தான் அதிக ஸ்கோர் செய்துள்ளார், ஆனால் அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார். எனவே, இந்த ஆண்டின் சிறந்த 2வது வீரரான விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்ப்போம். பந்துவீச்சில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முதலிடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பயணம்

ஆப்கானிஸ்தான் அணிக்காக, இப்ராஹிம் சத்ரன் இந்த ஆண்டில் இதுவரை அதிக ரன்கள் (500) எடுத்துள்ளார். அவரும் சதம் அடித்துள்ளார். பந்துவீச்சைப் பற்றி பேசுகையில், ஃபசல்ஹக் ஃபரூக்கி சிறப்பாக பந்து வீசியுள்ளார். 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் மைதானம் பேட்டிங்க்கு சாதகமா? பவுலிங்க்கு சாதகமா?

இந்த மைதானத்தில் இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. முதலில் ஆடிய அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலக்கை துரத்திய அணியும் அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் வெற்றி பெற்றன. ஒரு போட்டியின் முடிவு டை ஆனது. கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 5ல் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 260 ரன்கள்.

இங்கு அதிக ரன் சேஸ் செய்த சாதனை இந்தியா அணியின் பெயரில் உள்ளது. 1982ல் இலங்கைக்கு எதிராக 278 ரன்கள் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையேயான கடைசி போட்டியில், இரு அணிகளும் சுமார் 800 ரன்கள் எடுத்தன. 

டெல்லியில் வானிலை எப்படி இருக்கும்?

புதன்கிழமை நாட்டின் தலைநகரில் வானிலை முற்றிலும் தெளிவாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 13 முதல் 15 கிலோமீட்டர் வரை இருக்கும். ஈரப்பதம் சுமார் 40% இருக்கும். மழை பெய்ய வாய்ப்பில்லை. எனவே, முழுமையான மற்றும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

2019 உலகக் கோப்பை மறக்க முடியாத ஆட்டம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதற்கு முன் ஒருமுறை மட்டுமே உலக கோப்பை ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 22 ஆம் தேதி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் இந்தியாவை கட்டுப்படுத்தினார். அதிகபட்சமாக கோஹ்லி 67 ரன்கள் எடுத்தார். 

225 ரன்கள் எடுத்தால் போதும் என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சற்று நிதானமாக ஆடினார்கள் என்றாலும், இந்திய அணியும் விக்கெட்டுக்களை கைப்பற்றியது. மறுபுறம் முகமது நபியின் 52 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பை தக்க வைத்திருந்தார். ஆனால் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி உலகக் கோப்பை வரலாற்றில் தனது பெயரை பொறித்ததால், போட்டியின் இரண்டாவது பாதியில் கிரிக்கெட் உலகம் ஒரு பரபரப்பான காட்சியைக் கண்டது. 

இந்திய வீரர் முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை

கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 16 ரன்கள் எடுக்க வேண்டும். பந்து வீசிய முகமது ஷமி, ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்களான முகமது நபி, அஃப்தாப் ஆலம், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை அவுட் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தது மட்டுமின்றி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.