புதுடில்லி, அக். 12-
இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப், 41, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் கடந்த 2016 ஜன., மாதம் தாக்குதல் நடத்தினர்.
இதில், நம் விமானப் படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாதி ஷாகித் லத்தீப் மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது.
இவர், இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று, பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் என்ற இடத்தில், பயங்கரவாதி ஷாகித் லத்தீப்பை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து, பாக்., போலீசார் கூறியதாவது:
சியால்கோட்டில் உள்ள மசூதி ஒன்றில், மத குருவாக ஷாகித் லத்தீப் பணியாற்றி வந்தார். முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள், மசூதிக்குள் நேற்று அவரை சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தாக்குதலில், மற்றொரு பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement