Israel-Hamas war: “தவறு செய்யாதீர்கள்… இதுவொன்றும் 1943 அல்ல!" – ஹமாஸை எச்சரிக்கும் இஸ்ரேல்!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, தற்போது இரு நாடுகளுக்கிடையே பெரும் போராக வெடித்திருக்கிறது. இதில், அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், ஏவுகணை உள்ளிட்ட ராணுவ ஆயுத உதவிகளுடன், பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் போர்தொடுத்து வருகிறது. அதேசமயம், இரான், இராக் போன்ற நாடுகள் அமெரிக்கா இதில் தலையிடக் கூடாது என எச்சரித்தும் வருகின்றன.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்

இதுவரையில், போரில் இருநாடுகள் தரப்பிலிருந்தும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏராளமான குடும்பங்கள், தங்கள் பாசத்துக்குரியவர்களை இழந்து கண்ணீரில் வாடுகின்றன. பலர் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான சூழலில், இந்தியா இஸ்ரேல் பக்கம் நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இன்னொருபக்கம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இது போருக்கான நேரம். ஹமாஸின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தப் பூமியிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள்” எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

இந்தப் போரில், பல்வேறு நாடுகள் அமைதியை வலியுறுத்தாமல், `நாங்கள் இவர்கள் பக்கம் நிற்கிறோம்’ என்ற நிலைப்பாட்டை எடுப்பதும், அப்பாவி மக்களின் உயிர்களை மதிக்காமல் இரு தரப்பும் மாறி மாறி கடுமையாகப் போர்த்தொடுப்பதும் போரை இன்னும் தீவிரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கல்லன்ட் (Yoav Gallant), யூதர்கள் படுகொலையைக் குறிப்பிட்டு இதுவொன்றும் 1943-ம் ஆண்டு அல்ல என்று ஹமாஸை எச்சரித்திருக்கிறார்.

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்

பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடந்த 31 நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் மாநாட்டில் பேசிய யோவ் கல்லன்ட், “நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, மேலும் தவறு செய்யாதீர்கள். இது 2023, தவிர 1943 அல்ல. நாங்கள் அனைவரும் யூதர்கள். ஆனால், எங்களுக்கு வெவ்வேறு திறமைகள் இருக்கின்றன. இஸ்ரேல் அரசு மிகவும் வலிமையானது. நாங்கள் ஒன்றுபட்டவர்களாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் இருக்கிறோம். ஹமாஸ் என்பது காஸாவின் ஐ.எஸ்.ஐ.எஸ். இதுவொரு, காட்டுமிராண்டி அமைப்பு. இரானால் இது ஆதரிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய தற்காப்புப் படைகள், ஹமாஸை அழிக்கும். அதன், ஒவ்வொரு கடைசி நபரையும் நாங்கள் வேட்டையாடுவோம்” என்று ஹமாஸை எச்சரித்தார்.

1943-ம் ஆண்டை யோவ் கல்லன்ட் குறிப்பிடுவது, 1941 முதல் 1943 வரையிலான காலகட்டத்தில், ஜெர்மனியின் நாஜி படையால் சுமார் ஒரு லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதைக் குறிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.