புதுடில்லி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் திரைப்படம், 2014-ல் வெளியானது.
இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக, ‘ஆட் பிரோ அட்வர்டைசிங்’ என்ற நிறுவனத்திடம் இருந்து, தயாரிப்பாளர்களில் ஒருவரான, ‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், 6.20 கோடி ரூபாய் கடன் பெற்றது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டார்.
இந்த கடன் தொகையை திருப்பி அளிக்காததால் லதா மற்றும், ‘மீடியா ஒன் குளோபல்’ நிறுவனம் மீது, பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், லதா ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது, போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதை ரத்து செய்யக்கோரி, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது. ஆனால், மோசடி குற்றச்சாட்டை மட்டும் விசாரிக்க முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்தது.
உயர் நீதிமன்றம் மற்றும் முதன்மை நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது.
அப்போது, லதா மீதான வழக்கு குறித்து பெங்களூரு முதன்மை நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement