போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் 30 பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக சார்பில் இதுவரை 4 வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 94 தொகுதிகளுக்கான 5-வது வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய பிரதேசஉள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா நேற்று முன்தினம் கூறும்போது, “5-வது வேட்பாளர் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:
ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் சுமார் 25 முதல் 30 பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. அவர்களின் தொகுதிகளில் புதியவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யாரும் முன்நிறுத்தப்படவில்லை. இதன்படி வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பதிலாக வேறு நபர் முதல்வராக நியமிக்கப்படலாம்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 31 சதவீதம் பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். இதர வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட்டோர் 29%, பழங்குடியினர் 22%, தாழ்த்தப்பட்டோர் 13 சதவீதம் பேர் உள்ளனர்.
கடந்த 1957 முதல் 1998-ம் ஆண்டுவரை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது உயர் வகுப்பை சேர்ந்தவர்களே முதல்வராக பதவி வகித்தனர். பாஜக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 3 பேர் முதல்வராக பதவி வகித்துள்ளனர். இதை மக்களிடம் எடுத்துரைப்போம்.
இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.