ஜெருசலேம், ஹமாஸ் பயங்கரவாதிகளை தரை வழியே முற்றுகையிட்டு முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளதை அடுத்து, வடக்கு காசா பகுதியில் உள்ள, 10 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை தென் பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2007 முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துஉள்ளனர்.
கடந்த 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் துவக்கினர். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால், இஸ்ரேல் நிலை குலைந்து போனது.
மிரட்டல்
சற்று நேரத்தில் சுதாரித்த இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக பதில் தாக்குதலை துவக்கியது. இந்த போரில் இரு தரப்பிலும் இதுவரை 2,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலியர்கள் 150 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்; அவர்களை கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை, பாலஸ்தீனத்துக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் வினியோகத்தை இஸ்ரேல் நிறுத்தி உள்ளது.
இந்நிலையில், காசா பகுதியில் தரை வழியே முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. எனவே, வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை தென் பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பொது மக்களை கவசமாக பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். எனவே, பொது மக்களை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினால், பயங்கரவாதிகளை எளிதில் அடையாளம் கண்டு அழித்துவிடலாம் என இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
எச்சரிக்கை
ஆனால், இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, ஐ.நா., செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் கூறுகையில், ”பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் இல்லாமல் அத்தகைய வெளியேற்றத்தை நடத்துவது சாத்தியமில்லை.
”ஏற்கனவே உள்ள பெரும் சோகத்தை இந்த முடிவு பேரிடராக மாற்றி விடும் சாத்தியங்கள் உள்ளன. எனவே, இதை திரும்ப பெற வேண்டும்,” என, தெரிவித்தார்.
இந்நிலையில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என, ஹமாஸ் பயங்கரவாதிகள் எச்சரித்து உள்ளனர்.
மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த இஸ்ரேல் ராணுவம் முயற்சிப்பதாகவும், உளவியல் ரீதியாக போரை திசை திருப்பி ஒற்றுமையை குலைக்க நினைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் இருப்பதால், இந்த இடமாற்றம் சாத்தியமில்லை என, காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மூக்கை நுழைக்கும் ஈரான்
ஹமாஸ் பயங்கரவாதிகள் உட்பட, மேற்காசியாவை தலைமையகமாக வைத்து செயல்படும் பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இஸ்ரேலின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள லெபனானில், ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு உள்ளது. இது, ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புடன் கூட்டணி அமைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஈரான் ராணுவ அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாஹியானிடம் கேட்டபோது, ”அது குறித்து நாங்கள் முடிவு செய்வது, காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினரின் கைகளில் உள்ளது,” என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்