மக்களை கேடயமாக பயன்படுத்த ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டம்: தாக்குதலை தாமதப்படுத்தும் இஸ்ரேல்

புதுடெல்லி: கடந்த 2008-ம் காசா மீதான படையெடுப்புக்குப் பிறகு தரைவழியாக சென்று தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது இதுவே முதல்முறை.

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியங்களை கொன்று குவித்ததையடுத்து, இஸ்ரேல் வான் வாழியாக காசா மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் ஆயிரக்கணக் கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் சூளுரையை நிறைவேற்ற 3 லட்சம் வீரர்களுடன் தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகியுள்ளது.

இதற்காக, காசாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் விதித்துள்ள கெடு நிறைவடைந்த நிலையில்,மேலும் அவகாசம் அளிக்கப்பட்டு தாக்குதல் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதில் குறிப்பாக, பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் மனித கேடயங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் தரைவழித் தாக்குதலுக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிணைக் கைதிகளை உயிருடன் மீட்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதற்கு தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று, ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலத்தடி பதுங்கு குழிகளும் இஸ்ரேல்ராணுவத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த பதுங்கு குழிகளில்பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, போர் தொடங்கும்பட்சத்தில் அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கும். இது, இஸ்ரேல் ராணுவத்தின் தார்மீக செயல்பாட்டுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அங்கு நிலவும் காலநிலையும் போர்ச்சூழலுக்கு தகுந்த வகையில் இல்லை. பனிமூட்டமான வானிலையால் இஸ்ரேல் விமானங்கள் இயக்கப்படுவதிலும், குறிப்பிட்டஇலக்குகளை தாக்கி அழிப்பதிலும் ராணுவம் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.

ஈரான் எச்சரிக்கை: இதற்கிடையில், காசாவில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீன மக்கள் மற்றும் குடிமக்களுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் பிராந்திய நிலைமை ஒரேமாதிரியாக இருக்கும் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இஸ்ரேலுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.