`ஆன்லைன் மோசடி… ஆன்லைன் கொள்ளை’ என்று கூப்பாடு போட்டு சொல்லிக்கொண்டிருந்தாலும், இன்னும் மக்கள் ஆன்லைன் மோசடி வலையில் சிக்கிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
நவி மும்பையை சேர்ந்த 29 வயது இளைஞருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டெலிகிராமிலும், வாட்ஸ் ஆப்பிலும் நல்ல வருமானத்துடன் கூடிய ஆன்லைன் வேலை குறித்த ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை நம்பிய இளைஞர், அக்டோபர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மோசடி நபர் கொடுத்த அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார். கூடவே ரூ.20.22 லட்சத்தை மோசடி நபர் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளிலும் போட்டு வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அந்த இளைஞர் முதலீடு செய்த பணத்தையும், தான் வேலை பார்த்ததற்கான பணத்தையும் கேட்க தொடங்கியபோது, மோசடி நபர் இவரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த இளைஞர், நவி மும்பை சைபர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசாரும், இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட நான்கு நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் மோசடி என்பது படிக்காத மக்களிடம் மட்டும் நடக்கவில்லை. படித்த மக்களிடமும் இந்த மோசடி அதிகமாகத்தான் நடந்து வருகிறது. அதனால் இந்த மோசடியில் இருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பதை பார்ப்போமா…?
-
தெரியாத நபரிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்காதீர்கள். ஒருவேளை அந்த நபர் மீது சந்தேகம் ஏதாவது வந்தால் பிளாக் செய்துவிட்டு ரிப்போர்ட் செய்துவிடுங்கள்.
-
லிங்க்டுஇன் மாதிரியான பாதுகாப்பான வலைதளங்கள் தவிர, எந்த வலைதளத்தில் இருந்து ஆன்லைன் வேலை ஆஃபர்கள் வந்தாலும் நம்பாதீர்கள்.

-
ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு தகவல்கள், OTP ஆகியவற்றை எப்போதும், யாரிடமும் பகிர வேண்டாம்.
-
முன்பின் தெரியாத ஒரு நபருக்கு ஒரு பைசா கூட வங்கி கணக்கில் இருந்து அனுப்பவே கூடாது.
-
உங்கள் மொபைலில் கட்டாயம் பாதுகாப்பான செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்.