ம.பி.-க்கு ஐபிஎல் அணி, பெண்களுக்கு மாதம் ரூ.1,500 – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் ரூ.25 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, மாநிலத்துக்கு ஐபிஎல் அணி உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கவனம் ஈர்க்கும் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வரும் காங்கிரஸ் கட்சி மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதனை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல்நாத் வெளியிட்டார். மொத்தம் 106 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 59 வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

  • காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு உள்ளடக்கிய ரூ.25 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
  • மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு என ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) அணி உருவாக்கப்படும்.
  • ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  • பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்.
  • சமையல் எரிவாயு உருளை ரூ.500-க்கு வழங்கப்படும்.
  • பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
  • பழைய ஓய்வுதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
  • வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 முதல் 3000 வரை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.