உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் நம் நாட்டில் ஜாதிக்கொரு சுடுகாடும், ஒரே மதத்துக்குள் பல இறுதிச் சடங்கு வழிமுறைகளும் இருக்கின்றன.
அதனைக் கேள்விக்குள்ளாக்கும் சில நேர்வுகளிலும், நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பு சிதைந்துவிடாமல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழும் எனக் காரணம் காட்டி, அப்பாகுபாடுகளை அடிக்கோடிடவே செய்கின்றன அவ்வப்போதைய அரசாங்கங்கள். ஆனால் பல்வேறு ஜாதியினரும், மூன்று மதத்தவரும், நான்கு மொழிகளைச் சேர்ந்தவர்களும் வாழும் மாஞ்சோலை பகுதியில் அனைவருக்கும் ஒரே சுடுகாடு தான்.
ஈமக்கிரியைகளுக்காக சடலத்தை வெகு தொலைவிலுள்ள தங்களின் கிராமத்திற்குக் கொண்டு செல்வதென்பது பெரும் பணச்செலவும், அதிக சிரமங்களும் நிறைந்தது. வறுமை எனும் புள்ளியில் ஒன்றிணைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, இறந்துபோன குடும்ப உறுப்பினர்களை எஸ்டேட் பகுதியிலேயே அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நாளடைவில், நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் எஸ்டேட் வாசிகளாகிப் போனதால் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சையின்போது இறந்து போயிருந்தாலும் சடலத்தை எஸ்டேட்டுக்கு எடுத்துவந்து அடக்கம் செய்யும் வழக்கம் தான் இருந்தது.
மாஞ்சோலையில் 12ஆம் காட்டிலும், நாலுமுக்கில் 16ஆம் காட்டிலும், ஊத்தில் ஆரஞ்சுக் காடு எனச் சொல்லப்படும் 25ஆம் காட்டிலும், தேயிலைக்காடுகளின் முடிவில் கள்ளிக்காட்டுகென தனியே இடம் ஒதுக்கியது கம்பெனி. மூன்று எஸ்டேட்டுகளிலுமே குடியிருப்பிலிருந்து சுமார் 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் கள்ளிக்காடு அமைந்திருக்கும். குறைவான எண்ணிக்கையில் மக்கள் வசித்த காக்காச்சி மற்றும் குதிரைவெட்டியில் விதிவிலக்காக குடியிருப்புகளுக்கு அருகே கள்ளிக்காடு இருந்தது.
ஆரம்ப நாட்களில் இறப்புகளின்போது, சம்பந்தபட்டவர் உறவினரோ இல்லையோ அன்றைய தினம் வேலைக்குச் செல்லாமல் எல்லோரும் விடுமுறை எடுத்துவிடுவார்கள்.
மொத்த வேலையும் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கும். அது கம்பெனிக்கு பெரிய நட்டத்தினை உருவாக்கியது. தொழிற்சங்கத் தலைவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, யாராவது இறந்துபோனால், குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற அனைவரும் வேலைக்கு வரவேண்டும் என்றும், வேலைக்கு வருபவர்கள் அன்றைய தினத்தில் தாமதமாக வேலைத்தளத்துக்கு வந்து கொள்ளலாம் என்றும், அன்று மதியம் 12.30 மணி வரை மட்டுமே வேலைநேரம் என்றும் அறிவித்தது கம்பெனி. இருட்டும் முன் வீடுதிரும்ப வேண்டுமென்பதால் விதிவிலக்கான தருணங்களைத் தவிர்த்து, எப்போதுமே மதியம் 2 மணிக்குள் கள்ளிக்காட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள்.
இருதரப்புக்கும் பலனளிக்கக் கூடிய அறிவிப்பு என்பதால் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். அந்த அறிவிப்புக்குப் பிறகான ஆரம்ப நாட்களில் வந்த இறப்புகளின் போது, பலரும் தாமதமாக வேலைக்கு வந்தனர். நாளாக நாளாக அந்த வழக்கம் குறைந்து, குடும்ப உறுப்பினர்கள் / உறவினர்கள் தவிர்த்த ஏனைய அனைவரும் வழக்கம் போல காலை 7.30க்கு வேலைக்குச் செல்லத் துவங்கினர். எவரும் பயன்படுத்திக் கொள்ளாததன் காரணமாய், தாமதமாக வேலைக்கு வந்துகொள்ளும் வகையிலான தளர்வானது காலாவதியாகிப்போனது.
முன்னிரவு இறந்தவர்களின் சடலங்களை அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டும், சூடம் தெளித்தும், நல்லெண்ணெய் ஊற்றியும் பதப்படுத்தி வைப்பர். சக தொழிலாளிகள் யாரேனும் அவர்கள் வீடுகளில் சமைத்து, அந்த உணவை இறந்த வீட்டின் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு வருவார்கள்.
எஸ்டேட் பகுதி, பல அசாதாரண மரணங்களுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. நாலுமுக்கு தொழிலாளியான ஜானகிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1960ஆம் ஆண்டு வாக்கில் மூன்றாம் காட்டில் தண்ணீர் நிரம்பியிருந்த ஆற்றின் ஆழமான பகுதியில் கைக்குழந்தையுடன் குதித்து இறந்துபோனார். ஜானகி இறந்த இடமானது, இன்றளவும் `ஜானகி கெசம்’ என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. ஆற்றின் ஆழமான குழிகளை மலையாளத்தில் `கயம்’ என்பார்கள். எஸ்டேட் பகுதியில் இது மறுவி `கெசம்’ என்றானது. அதே கெசத்தில் 1991 மே கடைசி வாரத்தில் பெண் தொழிலாளி ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
மாஞ்சோலை ஆறாங்காட்டு அருவிக்கு மேலே தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டார் தொழிலாளி ஒருவர். நாலுமுக்கில் இளம் பெண் தொழிலாளி ஒருவரும் 1990ஆம் ஆண்டில் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ வைத்து தற்கொலை செய்த சம்பவங்கள் மேலும் பல நிகழ்ந்துள்ளன. அவர்களது உடல்களை வீட்டுக்கே கொண்டுவராமல் நேரே கள்ளிக்காட்டுக்குக் கொண்டுபோய் புதைத்துவிடுவார்கள். 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்தில் இறந்துபோன ஓய்வுபெற்ற ஒரு பெண் தொழிலாளியையும் இதுபோல வீட்டுக்குக் கொண்டுவராமல் பேருந்து நிறுத்தத்திலேயே மற்றவர்களின் பார்வைக்கு வைத்துவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள்.
மாஞ்சோலை 6ஆம் காட்டு புல்லுமொட்டையில் சின்ன கண்ணன் என்பவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பலநாட்கள் பேசப்பட்டதாகச் சொல்வர். அதன் ஓரிரு வருடம் கழித்து வெளிவந்த `சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற சினிமா பாடலைச் சொல்லி, அந்தப் பக்கமாய் போகும் சிறுவர்களை பயமுறுத்துவார்களாம். குடும்பப் பிரச்சனை காரணமாக 2004ஆம் ஆண்டில் நாலுமுக்கு 1ஆம் காட்டுப் பகுதியின் ஓடை அருகே மரத்தில் தூக்குக்கயிறு மாட்டி இறந்துபோனார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர்.
19.05.2019 அன்று ஊத்து எஸ்டேட் தேயிலைக்காட்டிற்குள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த எஸ்டேட் துணை மேலாளர், அந்தப்பாதையில் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தபோது, மாடு குத்தி குடலை உருவியது போல, அவரது வயிற்றிலிருந்து முதுகு வரைக்கும் பெரிய ஓட்டை இருந்திருக்கிறது. அவர் ஊத்து எஸ்டேட்டில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற தொழிலாளி வீரன் என்றும், அவரது மனைவி அப்போதும் அங்கு வேலைபார்த்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
இயற்கை மரணமோ, அகால மரணமோ, அசாதாரண மரணமோ எதுவாக இருந்தாலும், மதம், ஜாதி, மொழி வேறுபாடின்றி இறந்துபோன தொழிலாளர்கள் அனைவரையும் ஒரே கள்ளிக்காட்டில் தான் புதைப்பார்கள். விதிவிலக்காக, 12.08.1966 அன்று ஏலக் காட்டுக்குள் திருட்டை தடுக்கச் சென்றபோது உதவியாளரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட எஸ்டேட் மேலாளரான வெளிநாட்டைச் சேர்ந்த திமோத்தி ஸ்டுவர்ட் பிரிஸ்ட்லி தொரைக்கு, நாலுமுக்கு எஸ்டேட் மக்களால் ஊத்தில் தனியே பெரிய கல்லறை கட்டப்பட்டுள்ளது. கொழுந்து வண்டி (டிராக்டர்) ஓட்டும்போது விபத்தில் இறந்த ஓட்டுநர் சிவனுக்கும் அவர் இறந்த மாஞ்சோலை புனித அந்தோணியார் கோவில் அருகேயுள்ள சாலை ஓரத்திலேயே கல்லறை கட்டப்பட்டது.
அறுபதுகளில் ஊத்து எஸ்டேட்டில் `லுக் அவுட்’ என்ற இடத்திற்கு அருகே சிறு யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து இறந்துபோனது. அப்போதிருந்த பிரிட்டிஷ்கார எஸ்டேட் மேலாளர் அம்பாசமுத்திரம் சென்று யானை சிலை செய்து கொண்டுவந்து, அந்த யானைக்குக் கல்லறை கட்டினார். அந்த யானை சிலையை சில ஆண்டுகளுக்கு மக்கள் வழிபடவும் செய்தார்கள். வேறொரு வெள்ளைக்கார மேலாளர் வளர்த்த நாய் மாஞ்சோலை – காக்காச்சி இடையிலுள்ள 17ஆம் காட்டில் வைத்து இறந்து போனதால், அங்கு நாய்க்குக் கல்லறை கட்டிய சம்பவமும் உண்டு.
ஒரே கூட்டுக்குடும்பம் போல் வாழ்ந்த எஸ்டேட் மக்களை அவ்வப்போது நிகழும் இது போன்ற அசாதாரண மரணங்கள் உலுக்கிப் போடுவதைக் கண்டுள்ளேன். பல நாட்களுக்கு அந்த நபரும், அவர்தம் குடும்பமுமே அனைவர் சிந்தனையையும் ஆட்கொண்டிருப்பர்.

இறந்தவர்களைப் புதைப்பதற்காக குழி வெட்டுவதற்கு தொழிலாளிகள் நான்கு பேர் செல்வார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. குழிவெட்டும் தொழிலாளர்களுக்கு அன்றைய நாளுக்கான சம்பளத்தை கம்பெனி கொடுத்துவிடும். ஆனபோதிலும் நாலுமுக்கில் ஆரம்ப காலங்களில் குழிவெட்டும் வேலையில் மலையாளிகள் பங்கெடுப்பதில்லை. 1998-1999 கூலி உயர்வுப் போராட்டத்திற்குப் பிறகு உருவான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து தான் மலையாளிகளும் குழிவெட்டும் பணியில் இணைந்து கொள்ளத்துவங்கினர்.
சவப்பெட்டியை மேஸ்திரியிடம் மர வேலைசெய்யும் தொழிலாளர்கள் மூலம் கம்பெனி செய்துகொடுக்கும். இறந்தவர்களைப் பெட்டியில் வைத்து நான்கு பேர் சேர்ந்து தூக்கிச்செல்வார்கள். அந்த நால்வரில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களோடு மற்ற தொழிலாளர்களும் தாமாக முன்வந்து சுமந்து செல்வார்கள். எல்லோருக்கும் எல்லோருடனும் அறிமுகமும் அணுக்கமும் இருக்கும் என்பதால், தன் குடும்பத்தில் நிகழ்ந்த துஷ்டியாகவே (இறப்புகளைக் குறிக்கும் அப்பகுதி வட்டார வழக்கு) ஒவ்வொரு இறப்பு நிகழ்வையும் அங்கிருந்த மக்கள் பாவித்துக் கொள்வதைக் கண்டிருக்கிறேன்.
2000ன் துவக்கத்தில் அமரர் ஊர்தியாக ஒரு தள்ளுவண்டியைக் கொடுத்தது கம்பெனி. அதன் பின்னர் இறந்த உடலை அதில் வைத்துத் தள்ளிக்கொண்டு போக ஆரம்பித்தார்கள். இந்துக்கள் தெற்கு பக்கமும், கிறித்தவர்கள் மேற்கு பக்கமும், முஸ்லிம்கள் வடக்கு பக்கமும் தலை இருக்குமாறு புதைப்பார்கள். இது தான் நான் அறிந்தவரை அங்கு நிலவிய ஒரே வேறுபாடு.
பெரிய வெள்ளியின்போது பள்ளிக்கூடங்களுக்கு மூன்று நாள் விடுமுறை இருக்கும் என்பதால் எஸ்டேட்டுக்கு வந்துவிடுவோம். புராட்டஸ்டண்டுகள் அன்று காலை ஆலயத்தில் ஆராதனை முடிந்தபிறகு குடும்பத்தோடு கள்ளிக்காட்டுக்குப் போவார்கள். கத்தோலிக்கர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் நாளில் அனுசரிக்கும் கல்லறைத் திருநாளில் கள்ளிக்காட்டுக்குப் போய் வருவார்கள். இறந்தவர்களின் நினைவு நாளின்போதும் அங்கு சென்று வருவது இந்துக்களின் வழக்கம்.
எஸ்டேட்டில் இருந்தவரை, ஆண்டில் இருமுறையாவது குடும்பமாய் கள்ளிக்காட்டுக்குச் சென்று அங்குள்ள தாத்தா, சித்தி, மாமா கல்லறைக்குச் சென்று அதனைச்சுற்றிலும் வளர்ந்திருக்கும் செடி/கொடிகளைத் தெளித்து, சுத்தப்படுத்தி அங்கு மெழுகுவர்த்தி / விளக்கு / சூடம் ஏற்றி, அவர்களை வணங்கி மரியாதை செலுத்தி வருவோம். விரைவில் குத்தகை காலம் முடியப்போகும் சூழலில், அங்கு புதைக்கப்பட்டுள்ள, எஸ்டேட்டை உருவாக்கிய எங்களின் மூதாதையர்களின் கல்லறைகளுக்கு இனி செல்ல வாய்க்குமா, வாய்த்தாலும், புதர் மண்டி இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் கல்லறைகளை அடையாளம் கண்டு கொள்வோமா என்பது கேள்விக்குறியே!
படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், காஞ்சனை சீனிவாசன், இராபர்ட் சந்திர குமார்