பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்க வேண்டும்

 

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நேற்று (17) சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தொழில்சார் சட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலைவரம் பற்றியும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் தொழில்சார் பல சட்டங்கள் இருந்தாலும் 17 மாத்திரமே நடைமுறையில் உள்ளன எனவும், தொழில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் உள்வாங்கப்படாமலேயே உத்தேச திட்டம் வெளிவந்துள்ளது எனவும், எனவே, இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்தார்

அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான தொழில் மதிப்பு அங்கீகாரம் இன்னும் முறையாக கிடைக்கப்பெறாத வகையில், அதனை எப்படி தொழில்சார் நடவடிக்கையாக மாற்றுவது பற்றியும் கருத்தாடல் இடம்பெற்றது.

அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களும் இன்று அதிகம் பாதிக்கப்படுகின்றனர், இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் மலையக மக்களும் பெரும்பாலும் இடம்பெறுகின்றனர். வீட்டு பணிப்பெண்ணாக செல்பவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே, அவர்களின் பாதுகாப்புக்காக விசேட அலகொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம், அமைச்சர் கோரிக்கை முன்வைத்தார்.

அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான நிதி உதவி உள்ளிட்ட வசதிகளை மென்மேலும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இதன்போது விடுக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.