சென்னையில் ரோகிணி திரையரங்கில் விஜய்யின் `லியோ’ படம் திரையிடப்படவில்லை என தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது போல சில தியேட்டகளிலும் `லியோ’வுக்கான முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் நாளை வெளியாகிறது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் சில தியேட்டர்களில் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் சென்னையில் சில தியேட்டர்களில் ‘லியோ’ படம் திரையிடப்படவில்லை என அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.
“‘லியோ’ படத்தின் தயாரிப்பாளருக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் உள்ள பர்சன்டேஜ் ஷேர் விவகாரத்தால், ‘லியோ’வைத் திரையிடாமல் இருக்கின்றனர். பொதுவாக ஒரு படத்தை தியேட்டருக்கும் கொடுக்கும் போது, தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்குமிடையே ஒப்பந்தம் போடுவார்கள். இந்த ஒப்பந்தத்தில் தங்களது பர்சன்டேஜ் குறித்தும் தெளிவு படுத்தியிருப்பார்கள். இதற்கு முன் விஜய் படத்திற்கு என்ன பர்சன்டேஜ் கேட்டார்களோ, இப்போது அதை விட கூடுதலாக ஐந்து பர்சன்டேஜ் சேர்த்து கேட்பதால், படம் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டது. முன்பு 65லிருந்து 70 பர்சன்டேஜ் வரை வாங்கினார்கள். இப்போது அதில் இப்போது 5 பர்சன்டேஜ் சேர்த்து கேட்கிறார்கள்.
இன்னும் சில தியேட்டர்களில் வேறு விதமான சிக்கல்கள் இருக்கின்றன. தேவி, ஈகா போன்ற தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் ஐந்து ஷோக்கள் போடச் சொல்லிக் கேட்கின்றனர். ஆனால், அந்த தியேட்டர்களில் ஐந்து ஷோக்கள் திரையிட்டால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நெருக்கடியை ஏற்படுத்தும். அதனாலேயே எப்போதும் நான்கு காட்சிகளை மட்டுமே திரையிட்டு வருகிறார்கள். எப்போதும் போலவே இப்போதும் நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடுவோம் என்கின்றனர். இந்த விவகாரம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.
எல்லா ஊர்களிலுமே மாமூலாகப் போடும் பர்சன்டேஜை விட, 10 பர்சன்ட் வரை அதிகம் கேட்கிறார்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாக்களில் உள்ள அவர்கள் கேட்டபடி 80 பர்சன்டேஜ் வாங்கிவிட்டார்கள். ஆனா, சென்னை ஏரியாவில் 70 – 75 பர்சன்டேஜ் கேட்டுவருகிறார்கள். இவ்வளவு பர்சன்டேஜ் ஏன் கேட்கிறார்கள் என்றால், இதுதான் பெரிய படம். வேறெந்த பெரிய படமும் இப்போது வெளியாகாததால், இப்படிக் கேட்கிறார்கள். இதெல்லாம் கொஞ்சமும் நியாயம் இல்லாத விஷயம். ஆனாலும் பண்றாங்க. நாங்க என்ன பண்ணமுடியும்!
மீடியாக்களில் முன்பு ரெட் ஜெயன்ட் ஆதிக்கம் செலுத்துறாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க… ஆனா, இப்ப இவங்க (லியோ தரப்பு) என்ன பண்றாங்க?! சென்னை நகரத்துல தியேட்டர்கள்ல ‘லியோ’ எதனால வெளியாகலைனு விஜய் தரப்பிலும் கேட்கவே இல்லை. படம் வெளியானாலும் சரி, வெளியாகாட்டாலும் சரி என அவர் அமைதியாகிவிட்டார்” என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.