மதுரை: சதுரகிரி மலையிலுள்ள ஆனந்த வள்ளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்க முடியாது. பக்தர்களுக்கு காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து வனத்துறை முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த சடையாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலையில் ஆனந்த வள்ளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெறும். இவ்விழாவை ஒட்டி பக்தர்கள் 3 நாள் கோயிலில் தங்கியிருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி வியாழக்கிழமை விசாரித்தார். காவல் துறை தரப்பில், மலையிலுள்ள உள்ள கோயிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: உரிய அனுமதி இல்லாமல் கோயிலுக்குள் செல்வதற்கு பக்தர்கள் உரிமை கோர முடியாது. கோயிலில் தங்குவதற்கு ஒரு பிரிவினருக்கு அனுமதி வழங்கினால் மற்றவர்கள் நீதிமன்றத்தை நாடுவர். இதனால் கோயிலில் தங்க அனுமதிக்க முடியாது. பக்தர்கள் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அனுமதி வழங்குவது குறித்து வனத்துறைதான் முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.