மேல்மருவத்தூர் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆதிபராசக்தி கோயிலும் அங்கு மூத்த குருவாக இருக்கும் பங்காரு அடிகளாரும் தான். அந்த அளவுக்கு இவர் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் பெரும் புகழ்பெற்றிருந்தார். பெண்களும் கருவறைக்குள் சென்று கடவுளை பூஜிக்கலாம் என்ற நடைமுறையை முதன்முறையாக கொண்டுவந்து ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் இவர். இதுமட்டுமல்லாமல் கிராமமாக இருந்த மேல்மருவத்துத்தூரை பெரும் நகரமாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இப்படி பெரும் புகழ் பெற்ற பங்காரு அடிகளார் 19-ம் தேதி அன்று மாலை மாரடைப்புக் காரணமாக தன் 82-வது வயதில் காலமானார். இவர் மறைந்தாலும் இவரின் மீதான சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் ஆன்மீகம், கல்வி, விவசாயம் சம்பந்தமாக செய்திருக்கும் பணிகளும் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி. இவர் 1941-ம் ஆண்டு கோபால நாயக்கர் – மீனாட்சி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்துள்ளார். சிறு வயது முதலே கடவுள் பக்தியுடன் வளர்ந்து வந்துள்ளார் பங்காரு அடிகளார். இவரை ஒரு பாம்புதான் ஆன்மீக பாதைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அடிகளார் தன் சிறு வயதில் தூங்கும் அறையில் பாம்பு ஒன்று தொடர்ந்து சுற்றிவந்துள்ளது. ஒரு நாள் அவர் தூங்கும்போது பாம்பு அவரது உடம்பில் ஊர்வதை உணர்ந்துள்ளார். உடனடியாக தன் தாய், தந்தையை அழைத்து காட்டியுள்ளார். பாம்பை பார்த்ததும் அடிகளாரின் தாயார் கூச்சலிட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும் பாம்பு எங்கோ மறைந்துள்ளது. வீட்டில் எங்கு தேடியும் காணவில்லை. ஆதிபராசக்தி பாம்பு உருவத்தில் தோன்றி பங்காரு அடிகளாரை ஆட்கொண்ட நிகழ்வாக அவரது ‘ ஓம் சக்தி’ யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற அற்புதங்கள்தான் தன்னை ஆன்மீக பாதைக்கு அழைத்து வந்தது என்கிறார்.
அதேபோல் தண்ணீருக்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. அடிகளாருக்கு தனலட்சுமி என்ற தங்கை இருந்துள்ளார். அவர் திடீரென ஒருநாள் உயிரிழக்கவே, இதனை ஏற்க முடியாத துக்கத்தில் பங்காரு அடிகளார் தங்கையின் சமாதி அருகில் அமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு திடீரென வந்த பெண் ஒருவர் ஏன் அழுகிறார் என்று கேட்டுவிட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். தனக்கு தண்ணீர் கொடுத்தது யார் என்று நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு யாருமில்லையாம். ஆதிபராசக்திதான் தனக்கு தண்ணீர் கொடுத்ததாக அவர் நினைத்துள்ளார். நாள்கள் இப்படியே செல்ல 1963 – 1965 வரை ஆசிரியர் பயிற்சி பெற்று வந்துள்ளார். அந்த நேரத்தில்தான் ஆதிபராசக்தி தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் தன் பயிற்சி படிப்பை விடுத்து முழு நேரமாக ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

முதலில் மேல்மருவத்தூர் கோயில் இருக்கும் இடத்தில் சுயம்பு விக்கிரகம் இருந்துள்ளது. அங்கு சிறிய கீத்து கொட்டகை அமைத்து இறைவனுக்கு சேவை செய்வது, குறி சொல்வது என தனது ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார். இவரை பற்றி விஷயம் தெரியவே சில ஆண்டுகளில் அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத்தொடங்கி தற்போது பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார். பங்காரு அடிகளார் ஆன்மீக குருவாக மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவம், கல்வி, கலாச்சார அறக்கட்டளை என பல நிறுவனங்களை உருவாக்கி எளிய மக்களுக்கு உதவி செய்தவர் என்று நினைவு கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதில் 1999-ம் ஆண்டு மிகவும் பின்தங்கிய, ஊரகப் பகுதியாக அன்றைய வேலூர் மாவட்டத்தில் இருந்த கலவை என்ற ஊரில் வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி என்ற பெயரில் தமிழ்நாட்டில் முதல் 3 இடங்களுக்குள் மிகவும் சிறப்பாக செயல்படும் வேளாண் கல்லூரியாக தற்போது இருந்து வருகிறது. இக்கல்லூரியின் நிறுவனராக பங்காரு அடிகளார் இருந்தார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயில்கிறார்கள். 1970-களில் கிராமமாக இருந்த மேல்மருவத்தூரை 90-களின் இறுதிக்குள் நகரமாக வளர்ந்ததற்கு பங்காரு அடிகளாரின் பங்கு அளப்பரியது. இதைக் கவனத்தில் கொண்டு 2003-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உழவர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அது இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளும் மேல்மருவத்தூரில் செயல்படுகின்றன. அடிகளாருக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கிலான நிலங்களில் விவசாயமும் நடைபெற்று வருகிறது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து, கல்லூரிகளில் அதிக கட்டணம், அரசுக்கு முறையான கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அடிகளார் மீது வைக்கப்பட்டாலும், அவருடைய கல்வி, ஆன்மீகம் சார்ந்த அத்தனை முயற்சிகளும் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டு, அந்தப் பகுதி சார்ந்த மக்களுக்கு பயனளித்து வருகின்றன என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.