வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : கனடா தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவை வலியுறுத்தி உள்ளன.
காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப பெற்று விட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில் அதிகாரிகள் திரும்ப பெறப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மேத்திவ் மில்லர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைந்த்துக் கொள்ளும் இந்தியாவின் வலியுறுத்தலின் படி கனடா தனது 41 தூதரக அதிகாரிகளைத் திரும்ப பெற்றுக் கொண்டது எங்களுக்கு கவலையளிக்கிறது.
சிக்கல்களை பேசித் தீர்த்துக் கொள்வதற்கு களத்தில் தூதரக அதிகாரிகள் இருப்பது அவசியம். இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்த வேண்டாம் என்றும், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி இந்தியாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
கனடாவின் தூதரக பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டவர்களின் சலுகைகள் மற்றும் விலக்குகள் உட்பட 1961ம் ஆண்டு வியன்னா மாநாட்டின் ஒப்பந்தத்தின் ராஜதந்திர உறவுகளுக்கான தனது கடமையை இந்தியா நிறைவேற்றும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கோரும் இந்தியாவின் முடிவு எங்களுக்கு ஏற்புடையது அல்ல. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளை விலக்கிக் கொள்வது வியன்னா மாநாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுடன் ஒத்துப் போகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement