சென்னை: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை.
`செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும்; `உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அறிவை தரும் கல்வி நம் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அந்த கல்வியையும், பண்பாடு, கலாச்சாரம், ஞானம், இசை, அறிவு போன்றவற்றை வழங்கும் சரஸ்வதி தேவியை இன்று போற்றி வணங்குகிறோம்.
அறிவை தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், வளத்தையும் தரும் இயந்திரங்களை போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அனைவரும் சரஸ்வதிதேவியின் அருளை பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜயதசமி தினத்தன்று நாம் தொடங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையோடு புதிய சாதனைகள் படைப்பதற்கான பணிகளை இந்நாளில் தொடங்கிடுவோம். தீய சக்தியை அழித்து துர்கா தேவி பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழிலில் முன்னேற்றங்கள் காணவும், இறைவன் அருள் புரியட்டும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: நவராத்திரியின் முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு, மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்றின் அவசியத்தை உணர்த்தும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையினை நவராத்திரியின் 9 – வது நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்.
நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும், விஜயதசமி தினம் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்ததை போற்றும் விதமாக, வெற்றியின் தினமாக அனுசரிக்கப்படுகிறது.