மட்டக்களப்பில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவை 

 

 

மட்டக்களப்பு மாவட்ட ஆயிரக் கணக்கான  மக்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து  தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று  (21) மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்றது. 

மாவட்ட செயலகம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து ஒழுங்குபடுத்திய இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து பாவனையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு அவசியமான சேவைகளை கொழும்புக்குச் சென்று பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை  தவிர்க்கும் நோக்கில்  இந் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.

நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் விவசாயிகள், மீனவர்கள் மற்றும்  பொது மக்கள்  அன்றாடம் பயன்படுத்தும் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டே கிராமிய வீதிகள்  இராஜாங்க அமைச்சுப் பதவியை இந்த  மாவட்டத்திற்கு  ஜனாதிபதி வழங்கி இருக்கிறார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதி அபிவிருத்தி   இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை   சந்திரகாந்தன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்  ஆணையாளர் நாயகம்   நிஷாந்த அனுருத்த வீரசிங்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். பஸீர்,  உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட  போக்குவரத்து திணைக்களத்தின்  ஆணையாளர்கள், அதிகாரிகள், பொது மக்கள்  எனப்  பலர் கலந்து கொண்டனர். 

இன்றைய   சேவையில்    விசேடமாக சுமார்  1500 அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்கான உரிமை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான உரிமை மாற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

மேலும் உரிமை மாற்றத்திற்காக விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வு காணல், பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல், வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல், சகல வாகனங்களுக்கான உரிமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல் போன்ற சேவைகளும் இடம்பெற்றன. 

அத்துடன்  எழுத, வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்காக வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு விசேட பரீட்சை நடாத்தப்பட்டதுடன், நீண்டகாலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத, ஆவணங்களில் குறைபாடுகளுடன்கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு சிபாரிசுக் கடிதங்கள் வழங்குதல், சிலிண்டர் கொள்ளளவு 50ற்கும் குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளல். விசேட தேவையுடைய நபர்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குத் தேவையான வைத்திய தொழினுட்பக் குழுவின் சிபாரிசுகளை வழங்குதல்,  மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளின் தெளிவற்ற செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல், பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்தல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டன. 

இந்நடமாடும் சேவையில் மாவட்டத்தின் பலபாகங்களிலுமிருந்து பொதுமக்கள் வருகை தந்து தமது மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர். 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.