சென்னை: காவல் துறையில் பெண்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவர்களைக் கவுரவிக்கும் வகையில் அனைத்து பெண் போலீஸாருக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது.
தமிழக காவல் துறையில் சட்டம் – ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, புலனாய்வு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் உள்ளனர். தமிழக காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் ராணுவம், துணை ராணுவத்துக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமான ‘குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி‘ தமிழக காவல் துறைக்கு 31.07.2022 அன்று வழங்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட சிறப்பு லோகோ தற்போது அனைத்து போலீஸாரின் சீருடையையும் அலங்கரித்து வருகிறது.
தமிழக காவல்துறை 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தேபடிப்படியாக வளர்ச்சியடைந்தாலும் 1973-ம் ஆண்டுதான் காவல் துறையில் பெண்கள் அடியெடுத்து வைத்தனர். முதன்முதலில், ஒருகாவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ), ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என 22 பெண் போலீஸாரே பணியில் சேர்ந்தனர். அதன் பின்னர் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.
தற்போது ஒரு டிஜிபி, 2 கூடுதல் டிஜிபி.க்கள், 14 ஐஜி.க்கள்மற்றும் டிஐஜிக்கள், எஸ்.பி.க்கள்,கூடுதல் எஸ்பி.க்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என தற்போது, 35 ஆயிரத்து 329 பெண் போலீஸார் பணியில் உள்ளனர்.
தமிழக காவல்துறையில் பெண் போலீஸார் பணிக்கு வந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்வர் தலைமையில், மகளிர் காவலர்களின் ‘பொன்விழா’ கொண்டாட்டப்பட்டது.
இந்நிலையில், பெண் காவலர்களை கவுரவிக்கவும், அவர்கள் காவல் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் பணியில் உள்ள காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான அனைத்து பெண் போலீஸாருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆரம்பகட்டப் பணி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சட்டம்-ஒழுங்கு,குற்றப்பிரிவு, ரயில்வே காவல், சிபிசிஐடி, போக்குவரத்து, உளவுத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்ற தடுப்பு பிரிவு, கமாண்டோ படை, முதல்வரின் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவுகளிலுமே பெண் போலீஸார் மிகச் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள்.
அதாவது, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பில் 37 சதவீதம் பெண்காவல் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, அவர்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைகவுரவிக்கும் வகையில் சிறப்பு பதக்கம் வழங்குவது அனைவருக்கும் பெருமை. இது பெண்கள் முன்னேற்றத்துக்கு மேலும் உந்துதலாக இருக்கும்’’ என்றனர்.