இந்திய எல்லை அருகே படை குவிப்பிலும், பாலம் அமைப்பதிலும் சீனா தீவிரம் – அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிக்கை

வாஷிங்டன்,

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் அத்துமீறி நுழைந்தன. அதே ஆண்டு ஜூன் மாதம், அப்படைகளுக்கும், இந்திய படைகளுக்கும் இடையே மோதல் நடந்தது.

ராணுவரீதியான மற்றும் ராஜ்யரீதியான பேச்சுவார்த்தைக்கு பிறகு, பெரும்பாலான பகுதிகளில் இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன. இருப்பினும், இன்னும் சில பகுதிகளில் இருநாட்டு படைகளும் எதிரும், புதிருமாக நிற்கின்றன.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அசல் எல்லைக்கோடு தொடர்பாக இந்தியா-சீனா இடையிலான மாறுபட்ட கருத்துகள், சமீபகாலத்தில் இருபக்கத்திலும் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள், படைகுவிப்பு ஆகியவை மேலும் மோதலுக்கு வழிவகுத்தன.

ராணுவ கட்டமைப்புகள்

கடந்த 2022-ம் ஆண்டு, அசல் எல்லைக்கோடு அருகே சீனா தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகளை உருவாக்க தொடங்கியது. டோக்லாம் அருகே தரைக்கு அடியில் சேமிப்பு வசதிகளை சீனா உருவாக்கியது. அசல் எல்லைக்கோட்டின் 3 செக்டார்களிலும் புதிய சாலைகளை அமைத்தது.

அண்டை நாடான பூடானில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்களை அமைத்தது. பங்காங் ஏரி மீது இரண்டாவது பாலத்தை கட்டியது. இரட்டை பயன்பாடு விமான நிலையத்தையும், ஹெலிகாப்டர் தளங்களையும் அமைத்தது.

மேலும், கடந்த ஆண்டு அசல் எல்லைக்கோடு அருகே தனது ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளையும் சீனா குவித்தது. சில படைகள் வாபஸ் பெறப்பட்ட போதிலும், பெரும்பாலான படைகள் இன்னும் அங்கேயே உள்ளன.

500 அணு ஆயுதங்கள்

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி, கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு படைகளுக்கும் இடையே நடந்த மோதல், கடந்த 45 ஆண்டுகாலத்தில் இரு தரப்புக்கிடையிலான மிக உக்கிரமான மோதலாக அமைந்தது. இந்த மோதல், இருதரப்பு உறவுகளை சீர்குலைத்தது.

இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் குறைந்த அளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. எல்லையில் அமைதி நிலவும்வரை, சீனாவுடனான உறவு சீராக இருக்காது என்று இந்தியா கூறுகிறது.

சீனாவிடம், இயங்கும் நிலையில் 500 அணு ஆயுதங்கள் உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள், இது 1,000 ஆக உயரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.