இங்கிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா… வந்தாலும் பெரிய யூஸ் இல்லை? – இதுதான் காரணம்!

IND vs ENG, Hardik Pandya: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தொடங்குவதற்கு முன் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று கேட்டால் பலரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா என கூறிவந்தனர். இந்தியாவை நான்காவது ஆப்ஷனாக கூறும் அளவில்தான் பலரும் கணிப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யார் ஜெயிப்பார்கள் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு இந்தியா என்பார்கள். அந்தளவிற்கு நடப்பு தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாக இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

நீண்ட ஓய்வில் இந்தியா

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என 5 அணிகளை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கம்பீராக அமர்ந்துள்ளது, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இன்னும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகள் உள்ளன. இதில், இந்தியா (Team India) 2 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும் என்றளவில் உள்ளது.

கடந்த 22ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் விளையாடிய இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி 29ஆம் தேதி அன்றுதான் மோதுகிறது. இந்த ஒரு வார இடைவெளியை இந்திய வீரர்கள் ஓய்வுக்காகவும், தங்களின் குடும்பத்தினருடனும் செலவிட்டு வருகின்றனர். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய முகாமில் இருந்து தற்காலிகமாக வெளியே வந்துள்ளனர்.

ஹர்திக் காயம் எப்படி இருக்கு?

மறுபுறம் இந்திய அணிக்கு மேலும் ஒரு நன்மையை அளிக்கிறது. இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயத்தில் சிக்கினார். ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்ட அன்றே புனேயில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவரால் மதிப்பீடு செய்ய பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்டது சுளுக்கு தான் என்றும் மிக தீவிரமானதில்லை எனவும் தகவல் வெளியானதை அடுத்துதான் ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். இருப்பினும், அவருக்கு பதில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்ப்பட்டார். மேலும், வலுவான பந்துவீச்சு ஆப்ஷன் வேண்டுமென்பதால் ஷர்துல் நீக்கப்பட்டு ஷமி சேர்க்கப்பட்டார். தற்போது லக்னோவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவன் செலக்ஷனில் இருப்பார் என மூத்த பிசிசிஐ அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

முன்னர் போல் பந்துவீசுவாரா?

ஹர்திக் பாண்டியாவை போன்று வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இந்தியாவில் இல்லை. எனவே, அவர் பந்துவீசுவது இந்திய அணிக்கு முக்கியம். தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் அவர் பழைய வேகத்தில் வீசுவாரா என்பது சந்தேகம்தான். எனவே போட்டியில் அவர் விளையாடும் வரை இந்திய ரசிகர்களுக்கு இந்த கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.