ரபா, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளில் இரண்டு மூதாட்டி கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.
காசா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் நேற்று முன்தினம், 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தொடர் தாக்குதல் மற்றும் மின்சார தட்டுப்பாடு காரணமாக, காசாவில் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
மேற்காசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் நேற்று தீவிரமடைந்தது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், சுரங்கங்கள் உட்பட, 400க்கும் மேற்பட்ட இலக்குகள் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான தாக்குதல்கள் தெற்கு காசாவில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது நடத்தப்பட்டதாக அதை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்களில், 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், அதில் 300 பேர் குழந்தைகள், 170 பேர் பெண்கள் என்றும் காசா சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது.
இந்த போரில் காசா தரப்பில், 5,700க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
காசாவில் மின்சாரம் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, 72 சுகாதார மையங்களில் 46 மையங்களும், 35 மருத்துவமனைகளில் 12 மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பின் ஊழியர்கள் ஆறு பேர் தாக்குதலில் சிக்கி உயிர்இழந்தனர். அவர்கள் தரப்பில் இதுவரை 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று டெல்அவிவ் வந்தார்.
ஹமாஸ் படையினர் பிடித்து வைத்திருக்கும், 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகளில், நுாரிட் கூப்பர், 79, மற்றும் யோசேவ் லிப்ஷிட்ஸ், 85, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர்.
மனிதாபிமான அடிப்படையிலும், உடல்நிலை மோசமடைந்ததாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா திடீர் ஆதரவு
இஸ்ரேல் – ஹமாஸ் போரில், ஹமாஸ் படையினரை கண்டிக்காமல் சீனா மவுனம் காத்து வந்தது. உடனடி போர் நிறுத்தம் தேவை என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கடந்த வாரம் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் உடன், சீன வெளிஉறவுத்துறை அமைச்சர் வாங் யி, தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.அப்போது, ”தங்களை தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உள்ளது; இது இஸ்ரேலுக்கும் பொருந்தும். ஆனால் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு கட்டுப்பட்டு பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவை இருக்க வேண்டும்,” என, தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்