பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ராஜ் குந்த்ரா மும்பை சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மையமாக வைத்து UT69 என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை உர்ஃபி ஜாவேத் கதாநாயகியாக நடித்துள்ளார். அப்படம் அடித்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ராஜ் குந்த்ரா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் ஷில்பா ஷெட்டி, `நாம் இந்தியாவை காலி செய்துவிட்டு வெளிநாட்டில் சென்று ஷெட்டில் ஆகலாம்’ என்று கூறினார்.

என்னிடம் எனது மனைவி, `வெளிநாட்டில் இருக்க விரும்புகிறாயா ராஜ்?’ என்று கேட்டார். பிறந்து வளர்ந்த லண்டனில் அனைத்தையும் விட்டுவிட்டு எனக்காக இங்கு வந்தீர்கள் என்று சொன்னார். இப்போது நீங்கள் விரும்பினால் வேலையை பற்றி கவலைப்படாமல் இந்தியாவை காலி செய்ய தயாராக இருப்பதாக சொன்னார். ஆனால் நான் இந்தியாவை அதிகம் விரும்புவதாகவும் இந்தியாவை விட்டு போகமாட்டேன் என்று கூறிவிட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் இந்தியாவை காலி செய்யவில்லை. அவமானத்தாலும், பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாலும் பல முறை சிறையில் அழுது இருக்கிறேன்.
நான் உண்மையிலேயே உடைந்துபோனேன். எனக்கு அவமானம், பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. என்னால் எனது மனைவி மற்றும் குழந்தைகள் பின்னால் மீடியாக்கள் சென்றன. அது மிகவும் வேதனையாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ் குந்த்ரா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் 60 நாட்களுக்கும் மேல் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த சிறையில் உள்ள நிலவரம் குறித்து மனித உரிமை கமிஷனுக்கு ராஜ் குந்த்ரா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “சிறையில் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். 49 பேரை அடைக்கவேண்டிய அறையில் 250 பேரை அடைத்திருந்தனர். இரவில் உறங்கும்போது சிறிதும் நகர முடியவில்லை. சிறையில் பன்றிகளை விட கைதிகள் மோசமாக நடத்தப்படுகின்றனர். சிறை மெதுவாக கொல்லும் ஒரு விஷமாகும்.

சிறையில் அனைவரும் புகைப்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் புகைபிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அணைக்கப்படாத பீடி மற்றும் சிகரெட் துண்டுகளால் பல நேரங்களில் எனக்கு தீக்காயம் ஏற்பட்டது. தரை முழுக்க சிகரெட்டாக கிடக்கும். ஏற்கனவே இருப்பவர்களுடன் பேசி நட்பு ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே இரவில் நிம்மதியாக படுக்க முடியும். புதிதாக வந்தவர்களுக்கு படுக்கவே இடம் கிடைக்காது. சிறையில் சாப்பாடு மோசமாக இருக்கும். அரிசி முழுமையாக வேகவைக்கப்பட்டு இருக்காது. பருப்பு குழம்பு என்பது சுடுதண்ணீர் போன்றுதான் இருக்கும். சிறையில் கைதிகளுக்கு சாப்பாட்டுக்கு ரூ.280 செலவிடப்படுகிறது.
ஆனால் 100 ரூபாய் கூட செலவு செய்வார்களா என்று தெரியவில்லை. சிறப்பு வசதிகள் கிடைக்க பணம் கொடுக்கப்படுகிறது. சிறையில் 60 நாட்கள் இருந்தபோது 13 கிலோ எடை குறைந்துவிட்டேன். நான் 60 நாட்கள் தான் சிறையில் இருந்தேன். ஆனால் பலர் விசாரணை இன்றி 6-7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இட நெருக்கடி இருப்பதை சிறை அதிகாரிகளும் உறுதி செய்தனர். மேலும் சிறை வளாகத்தில் புகைப்பிடிக்க அனுமதிக்கப்படுவது உண்மைதான் என்றும், அதற்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யபட்டு இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.