Whatsapp-க்கு ஆப்பு… X தளத்தில் வீடியோ, ஆடியோ கால் செய்வது எப்படி? – முழு விவரம்

X Audio And Video Call: முன்னர் ட்விட்டர் என்றழைக்கப்பட்ட X நிறுவனம் எலான் மஸ்க்கின் கைகளில் மாறியதில் இருந்து பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி வருகிறது. ப்ளூ டிக் வாங்வதற்கு கட்டணம், ஆட்குறைப்பு, X பெயர் மற்றும் லோகோ மாற்றம், பதிவுகளை போடுவதற்கும், பதிவுகளுக்கு பதில் அளிப்பதற்கும் கட்டணம் (பரிசோதனையில் உள்ளது) என பல மாற்றங்களை கண்டுள்ளது. 

மேலும், X தளத்தை ஒரு அனைத்து சேவைக்களுக்குமான தளமாக மாற்றுவதை எலான் மஸ்க் நோக்கமாக கொண்டிருக்கிறார். எனவே, X தளத்திலேயே பண பரிமாற்றம், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வது போன்ற வசதிகள் கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில், தற்போது, X தளம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான சேவையை ஆரம்பித்துள்ளது. 

பல X பயனர்கள் தங்களின் பக்கத்தை திறந்தபோது ஒரு அறிவிப்பைப் பெற்றனர். அதில், “ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இங்கே உள்ளன!” என குறிப்பிடப்பட்டிருந்தது. “X ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பில் தொடர்புகொள்வதற்கான புதிய வழியை நாங்கள் வெளியிடுகிறோம். ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு இப்போது iOS-இல் கிடைக்கிறது, விரைவில் ஆண்ட்ராய்டில் கிடைக்கும்” என்று X தளத்தின் உதவி மையம் தெரிவித்துள்ளது.

“அதற்குத் தயாரா…?” என்று இந்த வசதி வெளியாவதற்கு முன் எலான் மஸ்க் அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பலரும் அவரின் பதிவால் வழக்கம்போல் குழப்பமடைந்தனர். தொடர்ந்து, அந்த வசதிகள் தொடங்கப்பட்ட பின்னர்,”X தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பின் ஆரம்ப பதிப்பு” என்று பதிவிட்டுள்ளார். 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு X தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு அம்சம் வந்துள்ளது, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் இருக்கும் முக்கிய அம்சங்களை X தளமும் வெளியிடத் தொடங்கியுள்ளது. பல பயனர்கள் இந்த அம்சத்தை பெறுகின்றனர். 

நீங்கள் X செயலியை திறந்தவுடன், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் வந்துவிட்டதாக உங்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள். தவிர, App Settings அமைப்புகளில் அதை இயக்க ஒரு விருப்பமும் உள்ளது. ட்விட்டரின் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். 

X தளத்தில் ஆடியோ அல்லது வீடியோ அழைப்பை எப்படி செய்வது?

– Envelope (மெசேஜ்) ஐகானை கிளிக் செய்யவும். உங்கள் மெசேஜ் பக்கம் திறக்கும்.

– ஏற்கனவே உள்ள மெசேஜ் உரையாடலில் கிளிக் செய்யவும் அல்லது புதிய உரையாடலைத் தொடங்கவும்.

– தொலைபேசி ஐகானை கிளிக் செய்யவும். அப்போது உங்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ ஆப்ஷன் தெரியும்.

– ஆடியோ அழைப்பைத் தொடங்க Audio Call ஆப்ஷனை கிளிக் செய்யவும். 

– வீடியோ அழைப்பைத் தொடங்க Video Call ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நீங்கள் அழைக்கும் கணக்கு நீங்கள் அவர்களை அழைக்கிறீர்கள் என்ற அறிவிப்பைப் பெறும், மேலும் அவர்கள் எடுக்கவில்லை என்றால் அவர்கள் அழைப்பைத் தவறவிட்டதாக அறிவிப்பைப் பெறுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.