Dhoni: “இன்னும் ரிட்டையர்டு ஆகல; அடுத்த ஐ.பி.எல்-க்கும் வருவேன்!" – தோனி கொடுத்த அப்டேட்!

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனி தனக்கு ஏற்பட்ட காயம் மற்றும் தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி 5-வது முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்று அசத்தியது. அந்தத் தொடரின் தொடக்கத்தில் இருந்தே இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துடனே தோனி விளையாடி வந்தார். விக்கெட் கீப்பிங் பணியை அவர் சிறப்பாக கையாண்ட போதிலும் பேட்டிங்கின் போது ரன்களை விரைவாக ஓடி எடுப்பதில் சில ஆட்டங்களில் சிரமங்களைச் சந்தித்திருந்தார்.

தோனி

போட்டி முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்துப் பேசியிருக்கிறார். “அறுவை சிகிச்சைக்குப் பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன்.

ஆனால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நவம்பர் மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் இருக்கும் எனவும் முழுமையாக குணமடைவேன் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்போது தினசரி வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

தோனி

2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராகத் தோற்று இந்திய அணி வெளியேறியிருந்தது. அந்தப் போட்டிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு தோனி கிரிக்கெட்டே ஆடவில்லை. இந்திய அணியில் தன்னுடைய எதிர்காலம் என்ன என்பது குறித்தும் வெளியே பேசாமலேயே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அந்த ஒரு வருட தாமதம் குறித்தும் தோனி இப்போது பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ‘நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோற்றிருந்தோம். அந்த மாதிரியான நெருக்கமான போட்டிகளில் தோல்வியடையும் போது உணர்ச்சிகளைகட கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். அப்போதே எனக்குள் என்னுடைய எதிர்காலம் குறித்து ஒரு முழுமையான திட்டம் இருந்தது. அதுதான் இந்திய அணிக்காக நான் ஆடும் கடைசிப்போட்டி என்பது எனக்குத் தெரியும். நான் அந்த நாளிலேயே ஓய்வு முடிவை எடுத்துவிட்டேன்.

ஆனால், அதை ஒரு வருடம் கழித்துதான் அறிவித்தேன்!’ என தோனி கூறியிருக்கிறார். மேலும், ‘நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துதான் ஓய்வு பெற்றிருக்கிறேன். இன்னும் ஐ.பி.எல் லிலிருந்து ஓய்வு பெறவில்லை.’ எனவும் தோனி கூறியிருக்கிறார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் இல் ஆடவிருப்பதை தோனி உறுதி செய்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.