நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான மஹுவா மொய்த்ரா. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று மஹுவா மொய்த்ராவுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு உத்தரவிட்டிருக்கிறது.

மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டை எழுப்பியிருக்கும் பா.ஜ.க எம்.பி-யான நிஷிகாந்த் துபே, ‘மஹுவா மொய்த்ரா, மக்களவையில் 61 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அவற்றில், 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருட்களை லஞ்சமாக அவர் பெற்றார்’ என்கிறார்.
`தனது மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான லாகின் ஐ.டி-யை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியும், அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனமும் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள மஹுவா மொய்த்ரா அனுமதித்தார்’ என்பதும் நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நிஷிகாந்த் துபே புகார் அளித்தார். அதையடுத்து, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை மேற்கொண்டுவருகிறது. பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்கள். அவர்களிடம், நெறிமுறைகள் குழுவின் தலைவரான வினோத் கே சோங்கர் முக்கிய ஆதாரங்களை பெற்றிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நெறிமுறைகள் குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு மஹுவா மொய்த்ரா மட்டுமே பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். நிஷிகாந்த துபேவுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பிய மஹுவா மொய்த்ரா, தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் அசராமல் அதிரடியாக பல கருத்துக்களைப் பதிவிட்டுவருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்னும் வாய்திறக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் எம்.பி-க்களாக இருக்கிறார்கள். ஆனாலும், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வினருக்கு எதிரான தன் ஆவேசமான பேச்சுகளால் திரிணாமுல் காங்கிரஸின் முகமாக இருக்கும் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக மோசமான குற்றச்சாட்டு பா.ஜ.க-வினரால் முன்வைக்கப்படும்போது, அவருக்கு ஆதரவாக கட்சித் தலைவர் களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரம் கிளம்பி பல நாள்களாகியும், அது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்துவருகிறார் மம்தா பானர்ஜி.
மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் வாய்திறக்காத மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்கு ஆதரவாக அமலாக்கத்துறை மீது பாய்ந்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மாலிக். அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரை கைது செய்திருக்கிறார்கள். ஜோதிப்ரியா மாலிக்கை, விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை துன்புறுத்திவருகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார்.

முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருந்துவரும் மம்தா பானர்ஜி, அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். ஆனால், மஹுவா மொய்த்ராவுக்காக அவர் குரல் எதுவும் கொடுக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி-யான டெரிக் ஓ ப்ரையன், “குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மஹுவா மொய்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்காக கட்சி காத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்,
இந்த நிலையில், மஹுவா மொய்த்ராவை அவரின் கட்சி கைவிட்டுவிட்டது என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், திரிணாமுல் காங்கிரஸின் தலைமையின் மௌனம், அவரின் கட்சி எம்.பி குற்றம் செய்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதையே உணர்த்துகிறது என்றும் பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விவகாரம் வெடித்தவுடன், என்ன நடந்தது என்ற விவரங்களை முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி திரிணாமூல் காங்கிரஸார் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜி அறிவுறுத்தியிருக்கிறார். மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்த விவகாரம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்ற முடிவை மம்தா பானர்ஜி மேற்கொண்டிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்குப் பின்னர் தான் மம்தா இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.