டெல்லி: கேள்விக்குப் பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் எம்.பி மஹுவா மொய்த்ரா. தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, வரும் 31-ம்தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெறிமுறைக்குழு அதிகாரபூர்வமாக தனக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பாகவே ஊடகங்களில் வெளியிட்டதை காரணம் காட்டி, வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனால் விசாரணை தேதி தள்ளி வைக்கப்பட்டது.
மேலும், தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4-ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். இந்த நிலையில், கேள்விக்கு பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மேலும் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.
சர்ச்சையின் பின்னணி: மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பியாக மஹுவா மொய்த்ரா உள்ளார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அண்மையில் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். குழுவின் தலைவர் வினோத் கே சோங்கர் இருவரிடமும் விசாரணை நடத்தி, முக்கிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டார்.