நடிகை அதிதி ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஒரு வாழ்த்து மடல் எழுதி, `பார்ட்னர்’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகர் சித்தார்த்.
‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான அதிதி ராவ் ஹைதரி இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சித்தார்த்தும் அதிதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்!” எனத் தெரிவித்து ஆங்கிலத்தில் கவிதை ஒன்றை எழுதி தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்தப் பதிவில் “பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. விரைவில் சந்திக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதற்கு அதிதியும், “ஆமாம் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. நீங்கள் ஒரு கவிஞர் என்று எனக்குத் தெரியாது. திறமையான உங்களைப் பற்றி நான் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்று கமென்ட்டில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அப்போதிருந்தே இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது சித்தார்த்தின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, மீண்டும் சமூக வலைதளங்களில் அத்தகைய கமென்ட்கள் எட்டிப் பார்க்கின்றன.