பெங்களூரு : இதுவரை கிராம பகுதிகளில் தென்பட்ட சிறுத்தை, தற்போது பெங்களூரின் மத்திய பகுதி அருகில் நடமாடுவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில், அவ்வப்போது சிறுத்தை நடமாடி, பீதியை கிளப்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் உள்ள பள்ளியொன்றில் சிறுத்தை புகுந்தது. இந்த வீடியோ உலகம் முழுதும் பரவியது. அதன்பின் அடுக்குமாடி குடியிருப்பில் நடமாடியது. இப்போது நகரின் சாலை நடுவில் நடமாடியுள்ளது.
ஒயிட்பீல்டு கூட்லுகேட் அருகில் நேற்று முன் தினம் இரவு, சிறுத்தை நடந்து சென்றுள்ளது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கூட்லுகேட்டின் ஹொசபாளையா அருகிலேயே சிறுத்தை நடமாடியது, இதை நாய்கள் விரட்டி செல்வது, கேமரா காட்சிகளின் வாயிலாக தெரிய வந்தது.
சிறுத்தை தென்பட்ட பகுதிகளின் மக்கள், கலக்கத்தில் உள்ளனர். இதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது:
பெங்களூரு பெரிய அளவில் வளர்கிறது. நகரின் வளர்ச்சிக்காக வனப்பகுதி நாசமாகிறது. குறிப்பாக 20 ஆண்டுகளில், பெங்களூரு புறநகரின் வனப்பகுதி அழிந்துள்ளது. இதன் விளைவாக, வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்து, மக்களை அச்சுறுத்துகின்றன.
சிறுத்தைகள் இரவு நேரத்தில், அதிவேகமாக செயல்படும். உணவை தேடி அலையும். இரவில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால், சிறுத்தைகள் இரவில் உணவு தேடி அலைவது வழக்கம். அது போன்று உணவு தேடியபடி சிறுத்தை, பெங்களூருக்குள் வந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement