லாஸ் ஏஞ்சல்ஸ், : பிரபல ஹாலிவுட் நடிகரும், ‘ப்ரெண்ட்ஸ்’ என்ற அமெரிக்க, ‘டிவி’ தொடரில் நடித்து புகழ் பெற்றவருமான நடிகர் மேத்யூ பெர்ரி, 54, நேற்று முன் தினம் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி. இவர், 1994 துவங்கி 2004 வரை ஒளிபரப்பான ‘ப்ரெண்ட்ஸ்’ எனும் அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் வாயிலாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்த டிவி தொடர், அமெரிக்க இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் சாண்டலர் பிங் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்காக, ‘எம்மி’ விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இந்த தொடர் ஓ.டி.டி., தளங்களில் வெளியானதன் வாயிலாக பெர்ரி உலகப் புகழ் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தன் அடுக்குமாடி குடியிருப்பின் குளியலறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேத்யூ போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அளவுக்கு அதிகமான போதை மருந்து, அவரது உயிரை பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement