காஸாவின் ஹமாஸ் அமைப்பு, கடந்த 7-ம் தேதி இஸ்ரேல்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின்மீது பதில் தாக்குதல் நடத்திவருகிறது. இஸ்ரேல் அதிதீவிர தாக்குதல் நடத்திவரும் வேளையில், பல்வேறு உலக நாடுகளும், ஐ.நா அமைப்பும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது வருகின்றன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து அவற்றை நிராகரித்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து, ரெட் விங்ஸ் விமானம், நேற்றிரவு ரஷ்யாவிலுள்ள டகேஸ்டன் பிராந்தியத்தின் தலைநகர் மக்காசகலா விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

இதில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். அப்போது, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரும் கும்பல் ஒன்று, பாதுகாப்பை மீறி விமான நிலையத்துக்குள் நுழைந்தது. சிலர் தடுப்புகளைத் தாண்டி விமான ஓடுதளத்துக்கும் சென்று விமானத்தைத் தரையிறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாலஸ்தீன கொடியுடன் `அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டபடியே விமான ஓடுதளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் வாகனங்களும் முற்றுகையிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைச் சோதனையிட்டனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களா… யூத மதத்தைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரித்தனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தச் சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ரஷ்ய விமானி ஒருவர், “விமானத்திலிருந்து பயணிகள் யாரும் இறங்க வேண்டாம். விமானத்தின் கதவுகளைத் திறக்க வேண்டாம்” என்று எச்சரித்திருக்கிறார். சில விமானங்கள் வேறு மாகாணங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் ஓடுதளத்திலிருந்த இஸ்ரேல் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. மேலும், நவம்பர் 6-ம் தேதி வரை இந்த விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகள், ரஷ்யாவில் இருக்கும் அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக உறுதியுடன் செயல்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 60 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.