Israel-Gaza: தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்… மோசமடையும் காஸாவின் நிலை! – அடுத்து என்ன?

`ஹமாஸ் படையை முற்றிலும் அழித்தொழிக்கும்வரை காஸாமீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம்’ என்ற அறிவிப்புடன், தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதுடன், பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றிருக்கிறார்கள்.

இஸ்ரேல் – பாலஸ்தீன போர்

அவர்களில், பலர் வெளிநாட்டவர் என்றும், தாய்லாந்து தேசத்தினர் 54 பேர் உட்பட 25 நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் பிடித்துவைத்திருக்கிறது என்றும், இஸ்ரேல் அரசு கூறியிருக்கிறது. இந்த நிலையில்தான், காஸா மீதான தாக்குதலை தற்போது இஸ்ரேல் விரிவுபடுத்தியிருக்கிறது.

குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை வான்வழித் தாக்குதல்கள் மூலமாக தரைமட்டமாக்கிவந்த இஸ்ரேல், தற்போது பீரங்கிகளை காஸா நகருக்குள் அனுப்பியிருக்கிறது. காஸா நகரின் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் இன்று (அக்.30) நுழைந்திருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் | போர் பதற்றம்

`கடந்த 24 மணி நேரத்தில், 600-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியிருக்கிறோம்’ என்று நேற்று (அக். 29) கூறிய இஸ்ரேல் ராணுவத்தினர், இரவு முழுவதும் நடந்த சண்டையில் 12 ’தீவிரவாதிகளை’க் கொன்றுவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். `காஸாவுக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின்மீது, தாக்குதல் நடத்துவதற்காக கட்டடங்கள், பதுங்குகுழிகள் ஆகியவற்றுக்குள் பதுங்கியிருந்த ஹமாஸ் படையினரைக் கொன்றுவிட்டோம்’ என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த இரண்டு நாள்களில் (அக். 28, 29) மட்டும் 302 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதுவரை, காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 8,005 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்களில் 67 சதவிகிதம் பேர் குழந்தைகளும், பெண்களும் ஆவர் என்றும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (அக். 29)-ம் தேதி காஸாவில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி, வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸா பகுதியில் உயிர்பலி

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவுபடுத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிரியா நாட்டுக்குள் இருக்கும் ராணுவக் கட்டமைப்பையும் இஸ்ரேல் தாக்கிவருகிறது.

சண்டை தொடர்ந்து நடைபெறுவதால், தண்ணீர், உணவு, மருந்து பொருள்கள் ஆகியவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு 33 லாரிகள் எகிப்து வழியாக காஸாவுக்கு நுழைந்ததாக ஐ.நா தெரிவித்திருக்கிறது. அக்டோபர் 21-ம் தேதிக்குப் பிறகு இவ்வளவு அதிகமான அத்தியாவசியப் பொருள்களை காஸாவுக்கு கொண்டுசெல்வது இதுதான் முதன்முறை என்றும் ஐ.நா கூறியிருக்கிறது.

காஸாவின் தற்போதைய நிலைமை குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை (அக். 29) ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, “காஸாவில் ஹமாஸ் படையினரிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கர்களுக்கு உதவுவது பற்றியும், அவர்களை பத்திரமாக விடுவிப்பது பற்றியும் விவாதித்தோம். மனிதநேய அடிப்படையில் காஸாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்வது பற்றி நான் வலியுறுத்தினேன்” என்று ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸ் படையினரிடம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிணைக்கைதிகளாக இருக்கும் நிலையில், காஸா மீது இஸ்ரேல் தீவிரத் தாக்குதல் நடத்திவருகிறது. அதனால், பிணைக்கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சம் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தளவில் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழித்தொழிப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

காஸாவின் வடக்கு பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பற்றிய காணொளி காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. ஆனால், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற குரல்களும் ஒலித்துவருகின்றன. ஹமாஸ் அமைப்பை அழிக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு, குழந்தைகளையும் பெண்களையும் கொன்றுகுவிப்பதை ஏற்க முடியாது என்றும், போர்க் குற்றங்களில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குரல்கள் ஒலிக்கின்றன!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.