எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனியார் துறையினரின் சம்பள திருத்தம் தொடர்பான யோசனைகளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு; மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் பெரும் விவாதம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு அரச நிதி நிலைமை குறித்து விவாதித்தோம். நமக்குத் தெரிந்த அனைத்து முறைகளையும் கையாண்டாலும் 2022ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட வரி வருமானம் 1751 பில்லியன் ரூபாய். 2022 ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான மொத்தச் செலவு 1265 பில்லியன் ரூபாவாகும். சமூர்த்தி மற்றும் பிற மானியங்களுக்கு 506 பில்லியன் ரூபாய். 1771 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இரண்டு விதமான செலவுகளும் சேர்ந்தாலும் ஏற்படும் இரண்டு செலவுகள் இவை. மேலும், அரசின் கடனுக்கான வட்டியும் செலுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு நிதியமைச்சரும் கடுமையான வரவு செலவுத் திட்ட நெருக்கடியின் போது கடன் வாங்கியும், பணத்தை அச்சடிப்பதன் மூலமுமே இந்த நிலைமையை கையாண்டுள்ளனர் ஆனால் இப்போது வெளிநாட்டுக் கடன் வாங்க முடியாது. புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் முன்னதைப் போன்று; பணத்தை அச்சிட முடியாது.

சம்பளத்தை அதிகரிக்க, திறைசேறிக்கு மேலதிகமாக பணம் சேகரிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பதன் ஊடாகவோ அல்லது பொதுச் சொத்துக்களை விற்று வரவு செலவு திட்டத்திற்கு நிதி சேகரிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களை ஒடுக்குவதாக உள்ளது. ஆனால் சம்பள உயர்வுக்கு தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும். அரசுக்கு வேறு வழியில்லை. இதனால், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிதி தொடர்பான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.