திருப்பூர்: திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிரான வாசகம் எழுதப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி அருகே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் பீடத்தை ஒட்டிய சுவரில், `வெளியே போ கவர்னர் ரவி’ என கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்தபடி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே அரசியல் ரீதியான மோதல் எழுந்துள்ள சூழலில், காந்தி சிலை அருகேஆளுநரை விமர்சித்து எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
யாரேனும் குடிபோதையில் இவ்வாறு எழுதினார்களா அல்லது அரசியல் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதா என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.