கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 20வது ஆண்டு விழாவை 2023 ஒக்டோபர் 26 – 31 வரை மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
கிழக்கு தலைமையகத்தில் ஆசீர்வாதங்களை வேண்டி சர்வமத அனுஷ்டானங்களுடன் ஆண்டு விழா ஆரம்பமானது. அதேபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம், காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்லடி முருகன்கோவில் ஆகிய இடங்களில் மத வழிபாடுகளிலும் பிரார்த்தனைகளிலும் படையினர் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 29) சோமாவதிய விகரையில் நடத்தப்பட்ட சிறப்பு போதி பூஜையுடன் சமய நிகழ்வுகள் முடிவடைந்தன.
எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) படையலகுகளுக்கு இடையிலான கரப்பந்து போட்டி நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் அன்று மாலையில் வழங்கப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளில் (ஒக்டோபர் 31) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், அணிவகுப்பு மைதானத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
படையினர்களுக்கு உரையாற்றிய தளபதி கிழக்கில் அமைதியான சூழலைப் பேணுவதற்கு அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டியதுடன், உச்சக்கட்ட தியாகம் செய்த அனைத்து வீரம் மிக்க போர் வீரர்களையும், காயமடைந்த வீரர்களையும் நினைவுகூர்ந்தார்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையத் தளபதி அவர்களினால் 20 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் வளாகத்தில் மாங்கன்று நடப்பட்டதுடன், குழுபடங்களும் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர் சிப்பாய்களின் உணவகத்தில் நடைபெற்ற அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும், அன்று மாலை நடைபெற்ற வண்ணமயமான இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகளான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி, மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் எச்டபிள்யூடிசி மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி, கிழக்கு பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.