வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: ‛‛ நான் இஸ்ரோவின் தலைவராக பதவி உயர்வு பெறுவதை, முன்னாள் தலைவர் கே.சிவன் தடுக்க முயற்சி செய்தார் ” என தற்போதைய தலைவர் சோம்நாத் குற்றம்சாட்டி உள்ளார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத், ‛நிலவு குடிச்ச சிங்கங்கள்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: எனக்கும் கே.சிவனுக்கும் 60 வயது நிறைவடைந்த உடன் எங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. கடந்த 2018 ம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த கிரண்குமார் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பிறகு எங்களின் இருவரது பெயர்களும் இஸ்ரோ தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எனக்கு கிடைக்கும் என நான் நம்பியிருந்தேன். ஆனால், அந்த பதவி சிவனுக்கு வழங்கப்பட்டது.
அதன் பிறகும், சிவன் முன்பு வகித்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. அந்த பதவி குறித்து சிவனிடம் நான் கேட்டும் அவர் பதில் எதுவும் சொல்லாமல் மழுப்பிவிட்டார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பி.என். சுரேஷின் தலையீட்டை தொடர்ந்து 6 மாதங்கள் கழித்து அந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன்.
இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகள் சேவைகளை செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு பதிலாக, தனது பதவியை நீட்டிக்கவே சிவன் முயற்சி செய்தார்.என்னை தலைவர் ஆக்கக்கூடாது என்பதற்காகவே விண்வெளி ஆணையத்தில் யாரை தலைவராக்குவது என்ற ஆலோசனைக்கு யு.ஆர்.ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநரை விட்டு தேர்வு செய்தார்கள் என நான் கருதுகிறேன்.
சந்திரயான் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் மோடியை வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கியே வைத்தனர். சந்திரயான் 2 தோல்விக்கு நிறைய சோதனைகளை செய்யாததே காரணம். கிரண்குமார் தலைவராக இருந்த போது சந்திரயான் -2 திட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தார் . அளவுக்கு அதிகமான விளம்பரமும் இந்த திட்டத்தை கடுமையாக பாதித்திருந்தது.
திட்டம் தோல்வி அடைந்தது ஏன் என்பதற்கான 5 முக்கிய காரணங்களை விசாரணை குழு கண்டுபிடித்துள்ளது. மென்பொருளில் தவறுகள் , நிறைய பிரச்னைகயை உருவாக்கியது, தவறான அல்காரித்தால் எல்லாம் நடந்தன.
இந்த தவறுகள் எல்லாம் சந்திரயான் 3ல் நடக்கக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். சந்திரயான் 3 வெற்றி அடைந்த போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்க தனிப்பட்ட முறையில் வந்தது எனது மிகப்பெரிய திருப்தியாகும். இவ்வாறு சோம்நாத் கூறியுள்ளார். இது குறித்த கட்டுரை மலையாள மனோரமா நாளிதழில் வெளியாகியுள்ளது.
கே.சிவன் கருத்து

இது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கூறுகையில், ‛‛ சோம்நாத் தனது சுயசரிதை புத்தகத்தில் என்னக் கூறியுள்ளார் என்பதை நான் இன்னும் படிக்கவில்லை. எனவே, இது குறித்து நான் எந்த கருத்தையும் கூற முடியாது”. என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement