புதுடெல்லி: 2025-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 5 முதன்மையான உயிரி உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா மாறும் என்று மத்திய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பர் 4 முதல் 6 வரை பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள உயிரி தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மெகா கூட்டமான “குளோபல் பயோ-இந்தியா – 2023”-ன் வலைத்தளத்தை தொடங்கி வைத்து ஜிதேந்திர சிங் பேசியது: “இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் உயிரி பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கருவியாக உயிரி தொழில்நுட்பம் மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் நமது உயிரிப் பொருளாதாரம் ஆண்டுக்கு இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது. உலகின் முதன்மையான 12 உயிரி தொழில்நுட்ப நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
2014-ஆம் ஆண்டில், இந்தியாவின் உயிரி பொருளாதாரம் சுமார் 10 பில்லியன் டாலராக இருந்தது. இன்று அது 80 பில்லியன் டாலராக உள்ளது. வெறும் 8/9 ஆண்டுகளில் இது 8 மடங்கு அதிகரித்துள்ளது. 2030-க்குள் 300 பில்லியன் டாலரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உயிரி பொருளாதாரம் வரும் காலங்களில் மிகப்பெரிய, லாபகரமான வாழ்வாதாரமாக இருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு 52 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக இருந்த பயோடெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தற்போது 6,300-க்கும் அதிகமாக 100 மடங்கு வளர்ந்துள்ளன.
ஒவ்வொரு நாளும் 3 பயோடெக் ஸ்டார்ட் அப்கள் சாத்தியமான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதற்கான விருப்பங்களுடன் இந்தியாவில் இணைக்கப்படுகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் “அமிர்த கால” இலக்குகளை அடைய அனைத்துத் தொழில்களுக்கும் இடையில் பரந்த ஒருங்கிணைப்பு முக்கியம். முழு அறிவியலும், முழு அரசும், முழு தேசமும் என்பதே இதன் தாரக மந்திரம்” என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில், உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.