காசா நீண்ட கால போருக்கு தயாராகும் வகையில் போதிய அளவில் ஆயுதங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரை நிறுத்தும் முடிவை இஸ்ரேல் அரசு எடுக்கும் வகையில், அதற்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், ஒரு மாதத்தை எட்ட உள்ளது.
கடந்த, அக்., 7ல் இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், 239 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றுள்ளது. இதையடுத்து, காசா பகுதியில் வான் வழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இதில், 9,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
முற்றுகை
பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தும், ‘ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரையில், இந்தப் போர் தொடரும்’ என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகள் வேறொரு திட்டத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக, கத்தார் தலைமையில் நடந்த பேச்சின்போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகள் பேசியுள்ளனர்.
அப்போது, இஸ்ரேல் சிறையில் உள்ள தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும்.
கடந்த 1967ல் இருந்த எல்லைகளின்படி, பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும். காசா பகுதியை முற்றுகையிட்டு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை ஹமாஸ் கூறிஉள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கூறியதாவது:
இஸ்ரேலுக்குள் நுழைந்து மிக துல்லியமான தாக்குதலை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளோம். இஸ்ரேல் மீண்டும் தாக்கும் என்பது தெரிந்தும் இந்த தாக்குதலில் ஈடுபட்டோம்.
இஸ்ரேல் தாக்கினால், அதை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம். நீண்டகால போருக்கு தயாராகும் வகையில், தேவையான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்துள்ளோம்.
மேலும், 230 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்டவையும் சேமித்து வைத்துள்ளோம்.
தற்போதைய நிலையில், 40,000 பேர் எங்கள் அமைப்பில் தயார் நிலையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், பல பதுங்கு குகைகளை உருவாக்கிஉள்ளோம்.
பதுங்கு குகைகள்
இது, 100 கி.மீ.,க்கும் அதிகமான துாரமுள்ளவை. தரைக்கு, 240 அடி ஆழம் வரை இந்த பதுங்கு குகைகள், அனைத்து வசதிகளுடன் அமைத்துள்ளோம்.
இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதனால் உயிரிழப்புகள் ஏற்படும். இதனால், உலக நாடுகள் அதற்கு நெருக்கடி கொடுக்கும். இதைஅடுத்து, போரை நிறுத்தும் அறிவிப்பை இஸ்ரேலை அறிவிக்க வைப்பதே எங்களுடைய நோக்கம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஹெஸ்பொல்லா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு அருகில் உள்ள லெபனானில் இருந்து இயங்கி வருகிறது ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு. ஈரானின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ‘வீடியோ’ செய்தியில், அவர் நேற்று கூறியதாவது:ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால், அது பிராந்திய அளவிலான பிரச்னையாக மாறும். காசா மீது தற்போது நடக்கும் தாக்குதல்களுக்கு அமெரிக்காவே காரணம். அதை செயல்படுத்தும் ஆயுதம் தான் இஸ்ரேல்.இந்த மோதல், இந்த பிராந்தியத்தில் விரிவடைவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அப்படி நடந்தால், அதற்கு அமெரிக்காவே காரணமாகும். அதனால், காசாவில் நடக்கும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்