சென்னை: எதிரிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தலின் தீவிரத்தை மதிப்பிட இந்திய விமானப் படை தற்போது உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துகிறது என விமானப் படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் விமானிகள் பயிற்றுநர் பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பவள விழா கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், இந்திய விமானப் படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பவள விழாவை முன்னிட்டு, விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. ஹெச்ஏஎல், எச்டி-2, பிளாட்டஸ், கிரண், எம்ஐ-17, டார்னியர் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள், சேட்டக் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன விமானப்படை வீரர்களின் குடும்பத்தினரும், பொது மக்களும் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.
வீரர்கள் டைவிங்: விமானப் படையின் ஆகாச கங்கா குழுவை சேர்ந்த 9 வீரர்கள் 9 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து டைவிங் செய்தனர். அதேபோல், 9 ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த வீரர்கள் பாராசூட் மூலம் தரையில் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்தனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்போரை பரவசம் அடைய செய்தது. இதையடுத்து, நடந்த கருத்தரங்கில், இந்திய விமானப் படையின் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி பங்கேற்று பேசியதாவது: எதிரிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தலின் தீவிரத்தை மதிப்பிட இந்திய விமானப் படை தற்போதுஉயர் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துகிறது.
வித்தியாசமான பயிற்சி: எதிர்காலத்தில் வெற்றிகரமான விமானிகளை உருவாக்க,நாம் வித்தியாசமான பயிற்சியைத்தொடங்க வேண்டும் கற்பித்தல்மற்றும் கற்றல் தொடர்பான நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போது, 20 வயதுக்குள் விமானப்படையில் சேரும் வீரர்கள் ஏ.ஐ. எனப்படும் ‘ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ தொழில்நுட்பத்துடன் இணைய வசதியுடன் விமானம் ஓட்டுவது எப்படி, விமானத்தை தரையிறக்குவது எப்படி என்று பல்வேறு விஷயங்களை தாங்களாகவே எளிதாக கற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், விமானப் படை அதிகாரிகள், வீரர்கள், ஓய்வுபெற்ற வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.