சென்னை: சென்னை, திருவண்ணாமலை, கரூர் மற்றும் கோவையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக இன்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அவருக்குச் சொந்தமான இடங்கள், நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 3-வது நாளாக, சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் நெடுஞ்சாலைத் துறை இல்லம், ஒப்பந்ததாரர்கள் வீடு, காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்புடைய இடங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டஇடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசா கிராண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமாக விற்பனை செய்யப்பட்ட பத்திரங்கள், என்ன மாதிரியான சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, அதுதொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் விற்பனை செய்துள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றி, அதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை 3-வது நாளாக தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையை வருமான வரித் துறை விரிவுபடுத்தியுள்ளது. திருவண்ணாமலையில், ஏற்கெனவே சோதனை நடைபெற்று வரும் இடங்களுடன் மேலும் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள வாசுகி முருகேசன் மற்றும் தங்கய்யா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வருமான வரித் துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.