மக்களவைத் தேர்தல் | அதிமுக, பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுகவும் பாஜகவும் வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழகத்தில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது” என்று திருவள்ளூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற சென்னை மண்டல வாக்குச்சாவடி பாக முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உடல்நிலை காரணமாகக் காணொலி மூலமாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

முதல்வர் ஸ்டாலினின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படித்தார். அதில், “திடீரென்று காய்ச்சலும் தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்.

தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என நமது திராவிட மாடல் அரசின் எல்லாத் திட்டங்களையும் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்.இதே மாதிரியான சாதனைகள் மத்திய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுதான் இண்டியா கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த, செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. பாஜகவின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜகவின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அதிமுக.இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

திமுகவும் இண்டியா கூட்டணியும் பாஜகவின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பாஜக அதனால்தான், வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடைபெறுகிறது. ரெய்டுகள் மூலமாக அதிமுகவை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும், அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல திமுக.

75 ஆண்டுகாலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; அந்த வெற்றி என்றைக்கும் தொடரும். வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியேகூட வருவதில்லை. ஆனால், இங்கு நம் தமிழகத்தில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாகச் சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் சகோதரர் வேலுவை சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில் – Conviction Rate எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை.வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும். அதனால்தான் வருகின்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும்.

கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழகத்தை நாசப்படுத்திய அடிமை அதிமுகவும் தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பாஜகவும் சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும் , வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழகத்தில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது.

இது, கலைஞர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். திமுக உடன்பிறப்புகளாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தாக வேண்டும். வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும். அடுத்து வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம். வாழ்க இந்தியா, வெல்க இண்டியா கூட்டணி” என்று முதல்வர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.