INDvsSA: `எனை வெல்ல எவருண்டு?' – தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தியது இந்தியா!

‘Man of all occasions’ என்றொரு ஆங்கில வர்ணனை உண்டு. எல்லா காலத்திலும் எல்லா தருணத்திலும் சாதிக்கக்கூடியவர்கள் என்பதாக இதற்கு பொருள் விளங்கிக் கொள்ளலாம்.

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இந்த சொற்றொடரை அப்படியே பொருத்திப் பார்க்கலாம். 8 வெவ்வேறு மைதானங்களில் 8 வெவ்வேறு அணிகளை எதிர்கொண்டு பெரும் ஆதிக்கத்தை வெளிக்காட்டி இந்திய அணி வென்றிருக்கிறது.

Ind Vs SA

அதிலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டியை வென்றதையெல்லாம் இந்திய அணி எந்தளவுக்கு உச்சத்தில் இருக்கிறது என்பதை வெளிக்காட்டியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணியும் இந்திய அணியும் ஈடன் கார்டனில் மோதும் இந்தப் போட்டி ஒரு ‘Pre Finals’ ஆக அதாவது இறுதிப்போட்டிக்கான ஒத்திகையாக இருக்கும் என்று சொன்னார்கள். இவ்வளவு பெரிய பில்டப்போடு நடந்த போட்டியில் இந்திய அணி எந்த சிரமமும் இல்லாமல் 243 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றிருக்கிறது.

Rohit Sharma

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் டாஸை வென்றிருந்தார். தென்னாப்பிரிக்காவை சேஸ் செய்ய வைக்கப்போவதாக அறிவித்தார். அங்கேயே இந்திய அணி பாதி வெற்றியை உறுதி செய்துவிட்டது. ஏனெனில், தென்னாப்பிரிக்க அணி இதற்கு முன் தோற்றிருந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங்தான் செய்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக தட்டுத்தடுமாறி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போட்டியிலும் தென்னாப்பிரிக்கா சேஸிங்தான் செய்திருந்தது. சேஸிங் செய்த இரண்டு போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்கா தடுமாறியிருக்கவே செய்கிறது. சேஸிங்தான் அவர்களின் பலவீனம். அதைச் சரியாக குறிவைத்து ரோஹித் அடித்தார்.

முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி ரன்ரேட்டை சரசரவென எகிற வைத்திருந்தார். அவர் 24 பந்துகளில் 40 ரன்களை அடித்து அவுட் ஆகியிருந்தார். இந்நிலையில்தான் நம்பர் 3 இல் விராட் கோலி களமிறங்கினார். இன்னொரு ஓப்பனரான கில்லும் பெரிதாக நின்று ஆடவில்லை. அவரும் 23 ரன்களிலேயே கேசவ் மகாராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். நம்பர் 4 இல் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஓப்பனர்கள் இருவரும் வேகமாக அவுட் ஆனதால் நின்று நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் ஸ்ரேயாஸ் ஆடிக்கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் செட்டில் ஆக நிறைய நேரம் எடுத்தார். நிறைய டாட்கள் ஆடினார். இந்த சமயத்திலும் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு கோலியிடமே இருந்தது. கோலியும் ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். கேசவ் மகாராஜவின் பந்தில் சில இடங்களில் தடுமாறவும் செய்தார். கோலி கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை கீப்பர் டீகாக்கும் தவறவிட்டார். ஒரு பந்தில் ரிவியூவ்வில் நூலிழையில் எட்ஜ்ஜிலிருந்தும் தப்பினார் கோலி. 67 பந்துகளில் கோலி அரைசதத்தை எட்டியிருந்தார். இந்த சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் செட்டில் நன்றாக அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார்.

Kohli

அது கோலிக்கு இன்னும் உறுதுணையாக இருந்தது. கோலி கொஞ்சம் செகண்ட் ஃபிடில் ஆட ஸ்ரேயாஸ் இறங்கி கலக்கினார். சில ஷார்ட் பால்களையும் நன்றாக ஆடினார். ரன்ரேட்டும் எகிற ஆரம்பித்தது. ஆனால் ஸ்ரேயாஸூம் நீடிக்கவில்லை. 77 ரன்களில் லுங்கி இங்கிடியின் பந்தில் அவுட் ஆனார். கே.எல்.ராகுலும் வந்த வேகத்தில் 8 ரன்களிலேயே அவுட் ஆனார்.

இதனால் கோலியின் மீதான பொறுப்பு இன்னும் கூடியது. தப்ரேஸ் ஷம்சி, இங்கிடி, ரபாடா என அபாயமாக வீசிய தென்னாப்பிரிக்க பௌலர்களை பக்குவத்தோடு சிறப்பாக எதிர்கொண்டு மெது மெதுவாக கோலி சதத்தை நெருங்கினார்.

Kohli

ஈடன் கார்டனில் கூடியிருந்த 70000 க்கும் அதிகமான ரசிகர்கள் தங்கள் மொபைல் விளக்கை காற்றில் வீசி ஆர்ப்பரிக்க திரண்டு நின்று மிளிரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு அரசன் உலா வருவதைப் போல இருந்தது. ரபாடா வீச தான் எதிர்கொண்ட 119 வது பந்தை எக்ஸ்ட்ரா கவரில் தட்டிவிட்டு சதத்தை எட்டினார் கோலி.

Kohli

35 வது பிறந்தாளை இன்று கொண்டாடும் கோலி ஓடிஐ போட்டிகளில் பதிவு செய்யும் 49 வது சதம் இதுவாகும். இதற்கு முன் ஓடிஐ போட்டிகளில் அதிக சதம் அடித்திருந்தவர் எனும் சாதனையை சச்சினே வைத்திருந்தார். சச்சின் 49 சதங்களை அடித்திருந்தார். சச்சினின் சாதனையை விராட் கோலி இப்போது சமன் செய்திருக்கிறார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் அடித்த 49 சதங்களை கோலி வெறும் 277 இன்னிங்ஸ்களிலேயே எடுத்துவிட்டார். கோலியின் சிறப்பான இன்னிங்ஸால் இந்திய அணி 50 ஓவர்களில் 326 ரன்களை எடுத்திருந்தது.

தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ரன்கள் டார்கெட். வலுவான ஹிட்டர்களை வைத்திருப்பதால் கடந்த கசப்பான நினைவுகளையெல்லாம் மறந்து இந்த முறை சேஸிங்கில் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதைப் போலத்தான் தென்னாப்பிரிக்க அணி ஆடியிருந்தது. மிக மோசமாக பேட்டிங் ஆடி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தனர்.

Siraj

தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அணி அவர்களின் கதையை முடித்துவிட்டது. சிராஜ், பும்ரா, ஷமி, ஜடேஜா, குல்தீப் என இந்தியாவின் பௌலிங் யூனிட் மொத்தமும் தங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வெளிக்காட்டியது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இடம் கொடுத்து வீசி இன்சைட் எட்ஜ் ஆக்கி டீகாக்கை ஸ்டம்பைப் பறிகொடுக்க வைத்தார் சிராஜ். வெளியே திரும்பிய ஜடேஜாவின் பந்தை கணிக்க முடியாமல் ஸ்டம்பை பறிகொடுத்து அவுட் ஆனார் கேப்டன் பவுமா.

வந்த முதல் ஓவரிலேயே மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ஷமி. கூடவே வாண்டர் டஸனையும் lbw ஆக்கினார். அந்த விக்கெட்டிற்கு முழு தன்னம்பிக்கையோடு ரோஹித்தை ரிவியூம் எடுக்க வைத்தார். க்ளாஸன், மில்லர் என ஜடேஜாவின் ஹிட் லிஸ்ட்டும் நீண்டு கொண்டே சென்றது. 17 ஓவர்களுக்குள்ளாகவே தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய விக்கெட்டுகள் அத்தனையையும் இந்திய பௌலர்கள் வீழ்த்திவிட்டனர். அதன்பிறகான ஓவர்களெல்லாம் இந்திய அணி வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஓவர்களாகவே இருந்தது. 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 9 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனாலும் பிறந்தநாளில் சதமடித்து சச்சினின் சாதனையை சமன் செய்து இன்றைய நாளைத் தனதாக்கிக் கொண்ட கோலிக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Jadeja

8 போட்டிகளில் ஆடியிருக்கும் இந்திய அணி எந்த போட்டியிலும் தோற்கவில்லை. இதே வேகத்தில் நாக் அவுட்டிலும் புயலாகச் சுழன்றடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.