ஹமாஸ் போராளிக்குழு கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 1400 பேர் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் போராளிக்குழுவை அழிக்காமல் விடமாட்டோம் எனக் கூறி பாலஸ்தீனம் மீது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலில், ஹமாஸ் போராளிக்குழுவை விடப் பாலஸ்தீன குடிமக்களே அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள்.

மேலும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சுற்றிவளைத்த இஸ்ரேல், அந்தப் பகுதிக்கு, குடி தண்ணீர் முதல் மருத்துவ உதவிவரை அனைத்தையும் தடை செய்திருக்கிறது. இதற்கிடையில், ஐ.நா வழங்கிய உடனடியாக மனிதாபிமான உதவிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. மேலும், ஐ.நா சபையில்,190 நாடுகள் பங்கெடுத்த “உடனடி போர் நிறுத்தத் தீர்மானம்” 120 நாடுகளின் பெரும் ஆதரவுடன் நிறைவேறியது. ஆனாலும், இஸ்ரேலின் தாக்குதல் நின்றபாடில்லை. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 4000 குழந்தைகள் உட்பட சுமார் 9,750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஐ.நா-வின் UNICEF, உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு உட்பட 18 அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். அதில், “கிட்டத்தட்ட ஒரு மாதமாக, உலகம் முழுவதும் இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் சூழலை, அதிர்ச்சி, திகிலுடன் கவனித்து வருகிறது. பல உயிர்களைப் பாலஸ்தீனம் இழந்து நிற்கிறது. இஸ்ரேலின் இடைவிடாத வான், பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 9,770 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஒரு பெரும் மக்கள் கூட்டம் முற்றுகையிடப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்களைக் கூட அந்தப் பகுதிக்குள் அனுமதிக்க மறுப்பதும், அவர்களின் வீடுகள், தங்குமிடங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படுவதைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனே மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும். ஹமாஸ் குழுவும் கைது செய்து வைத்திருக்கும் 240-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் இரு தரப்பினரும் தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும். முற்றுகையிடப்பட்ட மக்களுக்கு உதவ காஸாவிற்குள் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ” என அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.