வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்ததால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக, 1996ல் இலங்கைக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அந்த அணி 55 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’ ஆகி அனைத்து விக்கெட்களையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் வெளியேறும் நிலையில் இருக்கிறது. இதனால், அந்த அணி கடும் விமர்சனத்திற்குள்ளானது.
தொடர் தோல்வியைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா பதவி விலகினார். அனைத்து உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த வாரியத்திற்கு, முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் 7 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement