திருவனந்தபுரம்: கேரள தேவசம் போர்டு துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது. மத வழிபாட்டுத்தலங்களில் ஒற்றைப்படை நேரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து, தேவசம் போர்டு, இதர கோயில்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகள் சார்பில் மேல்முறையீடு செய்வது குறித்து கேரள அரசு பரிசீலித்து வருகிறது.
கேரள மத வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிக்காமல் விழாக்களை நடத்துவது கடினம். பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரங்கள் குறித்த விவரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் மேல்முறையீடு செய்வதே சிறந்த வழியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பட்டாசு வெடிக்க தடைவிதிக் கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடவுளின் அருளையும், பிரியத்தையும் பெற எந்த புனித நூலிலும் பட்டாசு வெடிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடப்படவில்ல. இதனை கருத்தில் கொண்டு, ஒற்றைப்படை நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
மேலும், மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல் துறை தலைவர்களும், மத வழிபாட்டு தலங்களில் சோதனை நடத்தி சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருக்கும் பட்டாசுகளை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறினால் அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.