நடிகர்களை அப்படியே நகலெடுக்கும் பலகுரல் கலைஞர்களையும் நாடக நடிகர்களையும் நிறையவே பார்த்திருப்போம். மலேசியாவை சேர்ந்த டான் பிரபாவும் இந்த வகைமைக்குள்தான் வருகிறார்.
அப்படியே நடிகர் கமல்ஹாசனை உரித்து வைத்ததைப் போல பேசுகிறார் . பிரபாவின் பேச்சிலும் நடையிலும் செய்கையிலும் என அத்தனையிலும் கமல்தான் நிரம்பியிருக்கிறார். 43 வருடமாக கமலின் நகலாகவே வாழ்ந்து வருபவர் தனக்கே உரித்தான தன்னுடைய சுயமான குணாதிசயங்களையே மறந்துவிட்டதாகச் சொல்கிறார். அவரிடம் இன்னும் விரிவாகப் பேசினேன்.

லோகேஷ் கனகராஜ் , கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் நான் தான் பெரிய கமல் ரசிகன் என்று சொல்கிறார்கள். ஆனால் , நான் அடித்து சொல்வேன் . என்னைவிட சிறந்த கமல் ரசிகர் இந்த உலகத்துலேயே இல்லை. அவரை உலகநாயகன் என்று சொல்வதை விட யுனிவர்சல் நாயகன் என்றுகூட சொல்லலாம் .
என் பூர்வீகம் மலேசியா. 43 வருடங்களாக கமல் குரலில்தான் பேசிவருகிறேன் . இதற்கான தொடக்கப்புள்ளி என் 15 வயதில் நான் பார்த்த ‘வாழ்வே மாயம் ‘ திரைப்படம் . கிளைமாக்ஸில் வரும் வசனத்திற்காகவே 27 முறை பார்த்தேன் . இப்போது யூட்யூப் , OTT போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால் அப்போது தியேட்டர் சென்று பார்ப்பதுதான் ஒரே வழி. தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து அந்த வசனமும் உச்சரிப்பும் என்னுள் பழகிப்போனது. பிறகு , தினசரி அவர் குரலில் பேசி, அதுவே என் குரலாக மாற்றினேன். எனக்குள் ஒருவனாக கமலைப் பார்த்தேன் .

ஆரம்பத்தில் குடும்பத்தினர் , நண்பர்கள் அனைவரும் நான் கமல் குரலில் பேசுவதை எதிர்த்தனர் , ‘எதுக்கு அவர் குரலில் தினமும் பேசுற! உனக்கு இதெல்லாம் தேவையா?’ என்றார்கள் . பல பேர் கேலி செய்தனர். ஆனால் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஒருவரின் குரலில் பேசுவதில் நான் பெருமைகொள்கிறேன். என் தாய்மொழி தமிழ் என்றாலும், எனக்கு நன்கு தமிழ் உச்சரிப்பு வந்ததற்குக் காரணம் கமல்தான் .

நடிகர் விவேக் ஒரு மேடையில் , “நீ யாரை அதிகம் நேசிக்கிறாயோ அவராகவே நீ மாறுவாய் .”என்று கலாம் சொன்னதாகச் சொல்வார். அதேபோல நான் முழுவதும் கமலைபோல் ஆகமுடியாவிட்டாலும் , என்னுள் ஒரு பகுதியாக அவரைப் பார்க்கிறேன் .
நிறைய பேர் ‘நீ மிமிக்ரி தான் பண்ணுற ..நான் நம்பமாட்டேன் .’ என்று முடிவே செய்துவிடுவார்கள் . என்றைக்காவது என்னை அறியாமல் என் உண்மையான குரல் வெளிப்படும். அது எப்போதென்று எனக்கே தெரியாது. அதனை சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இன்னொரு பக்கம் , ‘கமல் சாரிடம் பேசுவது போலவே இருக்கு’ என்று பாராட்டுபவர்களும் உண்டு. இது எதுவும் என்னை பாதிக்கவில்லை . இத்தனை ஆண்டுகளாகப் பலப்படுத்தி வந்த இந்தக் குரலை கமல் சார் என்றைக்காவது கேட்கமாட்டாரா ? நமக்கு இப்படியும் ஒரு ரசிகனா? என்று வியந்துவிட மாட்டாரா என்று காத்துக்கிடந்தேன் .

அதற்கான வாய்ப்பு கிடைக்க 42 வருடங்கள் ஆகிவிட்டன . சென்ற ஆண்டு விக்ரம் பட புரோமோஷன் மலேசியாவில் நடைபெற்றது. 29.05.2022 , 12.45 மணியளவில் , 4 நிமிடம் 1 செகண்ட் அவரை சந்தித்துப் பேசினேன். மற்றவர்களைப் போல அவரும் நான் மிமிகிரி செய்கிறேன் என்று நினைத்துவிடக் கூடாது என்று பயந்தேன் . ஆனால், நான் உள்வாங்கியதைத் தான் பிரதிபலிக்கிறேன் என்பதை அவர் புரிந்துகொண்டார். கிட்டத்தட்ட 6 அடிக்கு அவருடன் எடுத்த புகைப்படத்தை என் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை ஒருநாளுக்கு ஒருமுறையாவது பார்க்காவிடில் எனக்கு பொழுது முடிவடையாது.

சொல்லப்போனால் என் அகம் டிவியில் எந்நேரமும் கமல் தான். மேலும், நான் வெறுமனே கோஷமிடும் ரசிகன் அல்ல. அவர் சொன்ன நல்ல கருத்துகளை, மலேசியா முழுக்க பல மேடைகளில் அவர் குரலில் பேசியிருக்கிறேன். அவர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்பே, நான் செய்துவிட்டேன். `இறந்ததற்குப் பிறகு, இந்த பூத உடல் 4 பேர் செருப்பு தைக்க பயன்பட்டால் சந்தோசம் ‘ என்று சொல்லும்போது , அவர்மேல் கூடுதல் மரியாதை ஏற்பட்டது.
2017 காலகட்டத்தில் அவர் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது , இனி படங்கள் நடிக்க மாட்டாரா ? என்ற ஏக்கம் நிறைய இருந்தது . தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும். அது அவர் தனிப்பட்ட முடிவு என்று நினைத்துக்கொண்டேன். பிறகு, வாரம் ஒரு முறை வேட்டையாடு விளையாடு , அபூர்வ சகோதர்கள் பார்த்து வந்தேன் . தற்போது விக்ரமில் கம் பேக் கொடுத்து , அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் .

யுனிவர்சல் நாயகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகாலமாக மெருகேற்றிய குரல், என்னுள்ளே எப்போதும் நிறைந்திருக்கும். நான் சாகும்வரை இதே குரலில்தான் பேசுவேன். “நீ என்பதே இனி நான்தான் . வேறெங்கும் சொர்க்கம் இல்லை.” எனச் சொல்லி கமலை போலவே சிரிக்கிறார் .